ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், ரித்விகா, ரமேஷ் திலக், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள டிஎன்ஏ (DNA) திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. யூடியூபில் சற்றுமுன் டிரைலரும் வெளியாகி உள்ளது.
அதர்வா நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும் இன்னும் தன்னை டாப் ஹீரோ லிஸ்டில் நிலை நிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டுதான் இருக்கிறார். இதயம் முரளி படத்துக்கு முன்பாகவே டிஎன்ஏ படம் ரிலீஸ் ஆக போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 20 ஆம் தேதி தனுஷின் குபேரா படத்துடன் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ படமும் வெளியாகிறது.
சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நிமிஷா சஜயன் டிஎன்ஏ படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லரில் நிமிஷா தனது குழந்தையை குறித்து மருத்துவமனையில் போராடுவதும் அதற்காக ஹீரோ அதர்வா என்ன செய்கிறார் என்பதுதான் கதையாக அமைந்திருப்பது போல தெரிகிறது.
இந்த படத்தின் ட்ரெய்லரில் மருத்துவமனையில் பிறக்கும் நிமிசா சஜயனின் குழந்தைக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் சொல்ல, அந்த குழந்தையே என்னுடையது இல்லை என வாதாடுவதும் தான் முக்கிய கதையாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. சித்தா படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய நிமிஷாவின் நடிப்பு டிஎன்ஏ படத்திலும் நிமிர்ந்து நிற்கிறது. இன்று வெளியான டிஎன்ஏ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று இருக்கிறது. இந்தப் படத்தை ரெட் ஜாயிண்ட் மூவிஸ் வெளியிடுகின்றது.
