அரக்கரேயில் உள்ள வைஸ்யா வங்கி காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவர் நிச்சித். இவர் கிறிஸ்ட் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் மாணவன், மாலையில் டியூஷனுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் திடீரென கடந்த புதன்கிழமை மாணவனை காணவில்லை. மாணவன் காணாமல் போனதை அடுத்து, அவரது தந்தை அச்சுதா ஜே.சி. அன்று இரவு 10.30 மணியளவில் ஹுலிமாவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது மாணவனின் சைக்கிள் ஷாந்தி நிகேதன் லே-அவுட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் நேற்று பன்னார்கட்டா-கொட்டிகொரே சாலையில் உள்ள பாறை நிறைந்த பகுதியில் மாணவனின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் போலீசார், சந்தேக நபர்களை அடையாளம் கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தனர். அப்போது கோபிகிருஷ்ணா மற்றும் குருமூர்த்தி என இருவரை கைது செய்ய முயற்சித்த போது குற்றவாளிகள் காவல்துறையினரை கத்தியால் தாக்கியதால், துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரு குற்றவாளிகளும் குண்டடி பட்டு தற்போது அருகில் உள்ள மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். பணத்திற்காக குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் சம்பவம் பெங்களூரை அதிர வைத்துள்ளது.

