தேசிய மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள் (டிசம்பர் 11) இன்று. இந்த நாளில் பாரதியின் பார்வையில் பெண்ணியம் என எழுத முனைந்தபோது, அது ஒரே கட்டுரையில் முழுமை பெறாது என்பது நன்கு புரிந்துவிட்டது.
”பாரதியார்”என்பவர் ஒரு ஆழம் காண முடியாத ஒரு ஞானக்கடல்.
பரப்பளவு காணமுடியாத பிரபஞ்சத்தின் அளவு அவரது சிந்தனை வீச்சு.
அவரது மொழிவளமைக்கும், உத்வேகமான புரட்சிகரமான கருத்துக்களுக்கும் இமயம் கூட இணையாகாது.
அவர் ஒரு சித்தர் பெருமகன்.
அத்தகைய மகான் பெண்களைப் பற்றி குறிப்பிடுகையில் காலத்தைத் தாண்டியும் கவலைப்பட்டவர். பெண்களின் சிறப்பியல்புகள், நல்லியல்புகள் ஆகியவற்றை மட்டும் பாடிக்கொண்டிராமல், பெண்களின் முன்னேற்றத்தினால் சமூகத்தை மீட்டெடுக்க வழிகளையும், அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் முன்வைத்தவர்.
அவர் முன்னிறுத்திய தீர்வுகளில் ஒன்று கல்வியறிவு. அதிலும் எப்படிப்பட்ட கல்வியறிவு பெண்களுக்கு புகட்டப்பட வெண்டுமென்பதனை அவர் எழுதிய சில கட்டுரைகளின் வாயிலாக அறிய முடிகிறது.
அவற்றின் சிறிய துளியாக “இந்தியா” இதழில் 1907 ஆம் ஆண்டு பிரவரி மாதம் 9 ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட கட்டுரையிலிருந்து சிறு பகுதி பாரதியாரின் ரசிகர்களுக்காக அப்படியே வழங்கப்படுகிறது:
இனி ….
இதோ பாரதியார் பேசுகிறார்:
கொடிது கொடிது
”….. கவர்மெண்ட் பள்ளிக்கூடங்களிலும், வெள்ளைப்பாதிரிகளின் பள்ளிக்கூடங்களிலும் நமது கன்னியர்களிலே ஓர் சிறு பகுதியாருக்குக் கொடுக்கப்படும் பயனற்ற கல்வியானது, அறியாமையைக் காட்டிலும் நூறு மடங்கு கொடியதாகும். நம்மவர்கள் தாமாகவே இவ்விஷயத்தில் பிரயத்தனங்கள் செய்து – ஊருக்கு ஊர் பெண் பாடசாலைகள் ஏற்படுத்தி, அதிலே முற்றிலும் சுதேசிய முறைமையைத் தழுவிய கல்வி கற்பிக்கப்படுதல் வேண்டும்.
பெண்கல்வியில் கவனம்
ஆண்கள் குணம் அழிந்துபோய்விட்டாலும், பிறகு கடைத்தேற்றுவதற்கு ஒருவிதமான நம்பிக்கை மிஞ்சக்கூடும். பெண்கள் குணமழிந்து விட்டால், பிறகு தேசம் அதோகதி அடைந்துபோய்விடும். ஆகையால் பெண்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியானது, மிகுந்த தீர்க்காலோசனையின் பேரில் ஏற்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் தேசம் முழுமைக்கும் இப்போதே பொதுவிதிகள் அமைப்பதைக்காட்டிலும் – தாய் தந்தையர் அவரவர்களுக்குத் தெரிந்த மட்டிலும் நன்கு ஆலோசித்து, அதற்கிசைந்தவண்ணம் – அந்தந்த ஊரில் ஒருவிதமான கல்வி முறைமையை அனுசரித்து “அது எவ்வாறு நடந்து வருகிறது?” என்பதைக் கவனித்து பிறகு பொது விதிகளைப்பற்றி நினைக்கத்தொடங்குதல் பொருந்தும்.
மாதர்களுக்குக் …………………………………………………………………………..பகவான் சொல்லுகிறார்.
மாதர்கள்…………………………………………………………. உண்மையே ஆகும்.
பாரதநாடு இப்போது அடைந்திருக்கும் இழிவு நிலைமையிலிருந்து உன்னதம் பெறவேண்டுமானால், ஆண்கள் மட்டுமே யல்லாமல் பெண்களும் தேசபக்தியிலே சிறந்து விளங்க வேண்டும்.
பாரதத்திலே, கல்வியின் மாதா குந்திதேவி, சத்தியபாமை முதலிய ஸ்திரீ ரத்தினங்களின் சரித்திரங்களை நமது பெண்கள் அறியவுமான சக்தி வேண்டும். புராதன ரஜபுத்ர ஸ்திரீகளின் எண்ணில்லாத வீர சரித்திரங்கள் கற்பிக்கப்படாத பாடசாலைகளுக்குப் பெண்கள் போகலாகாது.
“அர்ஜுனனைப் போன்ற வீரர்களையும், பாஸ்கராச்சாரியன், சங்கரன், ராமானுஜன், காளிதாசன் முதலியவர்களைப் போன்ற பலவிதமான ஞானவான்களையும் பெற்று வளர்க்க வேண்டும்.’ என்ற ஆசை நமது பெண்களின் நெஞ்சிலே குடியேற வேண்டும். இது நிற்க.
தேசத்தின் எந்தவிதமான பெருங்காரியமும் கைகூடி வரவேண்டுமானால், அதற்கு ஸ்திரீகளின் மனோபலம் இல்லாமல் தீராது. இதனை எழுதுபவரிடம் ஸ்ரீஇ சகோதரி நிவேதிதாதேவி சில சற்போதனைகள் கூறிவருமிடையே அந்த அம்மையார் சொன்னார்:
“ஐயா… மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு, அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்துவிட முயல்வது வீண்முயற்சி. அது ஒருபோதும் நடக்கமாட்டாது.” என்றார்.
இந்த வசனத்தை ஒவ்வொரு தேசாபிமானியும் மனதிலே பதித்துக்கொள்ளும்படி விரும்புகிறோம். ”
என பாரதியார் பதிப்பித்துள்ளார்.
என்ன ஒரு ஆச்சரியம்!
பெண்கள் கல்வி பெறுவது எவ்வளவு முக்கியமோ அதனினும் எத்தகைய கல்வியறிவு பெறவேண்டுமென தெளிவாக வரையறுக்கிறார். அதாவது, பாரதத்தின் வீரப்பெண்களின் சரித்திரத்தையும்,
அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டுமென்றும் தெளிவுறுத்துகிறார்.
ஆனால், இன்றைய பெண் கல்வியையும், பெண்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையும், பெண்களே பெண்களைப் பற்றி செய்யும் சுய மதிப்பீடும், மேற்கத்திய கலாச்சாரத்தினால் எந்தளவிற்கு பாழ்பட்டிருக்கிறது என்பது, இன்றைய தொலைக்காட்சித் தொடர்களும், பெண்கள் மது அருந்தச்செல்வதற்கான “பப்”(PUB) எனப்படும் மது குடியரங்குகள், குடித்துவிட்டு தன்னிலை மறந்து ஆடிக்களிக்கும் நடன அரங்குகள் பெருகிவருவதிலிருந்தே தெரியவரும்.
பெண்களின் சுதந்திரம் என்பது எத்தகைய கேவலமானதொரு நிலையை எட்டியுள்ளது என்பதை “தனது திருமணத்தின்போதும், திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியின்போதும் கோரமாக மூன்றாம்தர நடன மாதுபோல் ஆடிவருவதிலிருந்தே” நாம் புரிந்து கொள்ளமுடியும்.
இருப்பினும் இந்நிலையை மாற்றுவதற்கு பல பாரதியார்கள் ஆங்காங்கு பாரதத்தில் பிறந்திருப்பார்கள்; நிச்சயம் பெண்களின் மேன்மையான பெருமைகளை மீட்டெடுப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருப்போம்.

