கோடை விடுமுறையைக் கொண்டாட மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் இன்று (மே 25) முதல் மே 31-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.சரவணன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கொடைக்கானலில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் கோடு (QR-code) டிஜிட்டல் கட்டண முறையால், தூண்பாறை (Pillar Rock), குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் போன்ற ஒற்றை வழிப்பாதை கொண்ட முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் மலைச்சாலைகளில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த ஆன்லைன் கட்டணத் தாமதத்தால் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் வாகன ஓட்டிகளும் பல மணி நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளான நிலையில், பொதுமக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து போக்குவரத்துப் பாதிப்பைச் சீரமைக்க மாநில அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடித் தற்காலிகக் கட்டண விலக்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.
வனத்துறை சோதனைச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது மற்றும் சரிபார்ப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், காத்திருப்பு நேரம் குறைந்து வாகனங்கள் தடையின்றிச் செல்ல வழிவகுக்கும் என்றும், இந்த வார இறுதிக்குள் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
