Wednesday, March 18, 2026
HomeUncategorizedசென்னையில் நடைபெற்ற பாஜக முப்பெரும் விழா

சென்னையில் நடைபெற்ற பாஜக முப்பெரும் விழா

இன்றைய தினம், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பாகச் சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகம் முழுவதும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காகவும், நீர் நிலைகளை மேம்படுத்துவதற்காகவும், பசுமையைப் பாதுகாக்கும் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பல சாதனையாளர்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமைக்குரியது.

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, ஒரு தனி நபருக்கு, ஒரு ஆண்டுக்கு, 1,700 கன மீட்டர் தண்ணீர் கிடைத்தால், வளமாகவும், 1,000 கன மீட்டர் முதல் 1,700 கன மீட்டர் அளவிற்குத் தண்ணீர் கிடைத்தால், போதுமான அளவும், 500 கன மீட்டர் முதல் 1,000 கன மீட்டர் அளவில் தண்ணீர் கிடைத்தால், அது தண்ணீர் பற்றாக்குறை எனவும் 500 கன மீட்டருக்கும் கீழே, தண்ணீர்ப் பஞ்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் அறிக்கையின்படி, தமிழகமும், ஆந்திராவின் சில பகுதிகளும், 500 கன மீட்டருக்கும் கீழே, தண்ணீர்ப் பஞ்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டில், தமிழகம் முழுவதுமே, தண்ணீர்ப் பஞ்சத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆந்திர மாநிலம், 2050 ஆம் ஆண்டில், பல மடங்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. இந்திய அளவில், தமிழகம் மட்டுமே, 2050 ஆம் ஆண்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு ஆட்படும் எனத் தெரிகிறது.

மற்றொரு அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 311 ஆறுகளில் சோதனை மேற்கொண்டதில், மிகவும் மாசுபட்ட ஆறுகள் பிரிவில் உள்ள நான்கு ஆறுகளும் தமிழகத்தில் உள்ளன என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியது. பல்வேறு காரணங்களுக்காக, நாம் நதிகளைப் பலிகொடுத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் பல்வேறு ஆறுகள், இந்திய அளவில் மாசடைந்த நதிகளாக மாறியிருக்கின்றன.

சுற்றுச்சூழல் மாசு, காற்று மாசு எனப் பல வகையில் நாம் பாதிக்கப்பட்டு வருகிறோம். நம்முடைய குழந்தைகள் சுவாசிக்கும் காற்று முழுவதும் மாசடைந்து இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. இதனைச் சரிசெய்ய, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

தமிழக நதிகளை மீட்டு சீரமைக்கவும், சுற்றுச் சூழலை மேம்படுத்தவும், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நமது பிரதமர் அவர்களும், தூய்மை இந்தியா திட்டம், பிளாஸ்டிக் மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்.

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்திருப்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும், 75 நீர் நிலைகளைச் சுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அன்னையின் பெயரில் மரம் நடும் முன்னெடுப்பையும் சமீபத்தில் செயல்படுத்தியுள்ளார். யோகாசனத்துக்குப் பிறகு, நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் உலகத்துக்குக் கொடுத்திருக்கும் திட்டம், மிக அவசியமானவற்றை மட்டுமே நடைமுறையில் மேற்கொள்ளும் வாழ்க்கை முறையான LIFE முன்னெடுப்பாகும்.

இவற்றின் மூலம், சுற்றுச்சூழல் மேலும் பாதிப்படைவதைக் கட்டுப்படுத்த முடியும். நாம் அனைவருமே இணைந்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தினால் மட்டுமே நாம் எதிர்கொண்டிருக்கும் மிக அபாயகரமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வரமுடியும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடத்திய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச் சூழல் பிரிவின் மாநிலத் தலைவர் திரு R.P.கோபிநாத், துணைத் தலைவர் திரு M.S.சரவணன், மற்றும் மாநிலச் செயலாளர்கள், மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். – மாநில தலைவர் திரு K.அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments