வேர்களும் அஸ்திவாரமும் வெளியே தெரிவதில்லை. ஆனால், அவையன்றி மரங்களும், கட்டிடங்களும் ஒருபோதும் கிடையாது. தான் தோற்றுவித்த அனைத்து துறைகளிலும் மனிதன் ஏதோ ஒரு முத்தாய்ப்பு வைத்துதான் வருகிறான். அப்படி வைப்பவர்களில் பலர் பொதுநல நோக்குடன் செயல்பட்டு அடுத்த தலைமுறைக்கான பழவிதைகளை தூவித்தான் செல்கிறார்கள். வரலாற்றின் வழிநெடுக பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்படி ஒரு உதாரணம்தான் சங்குசுப்ரமணியம் என்னும் மாமனிதர்.
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” என தமிழுலகம் போற்றும் ”உண்மையான கவிப்பேரரசு” கம்பன் பிறந்த அதே ”தேரழுந்தூரில்” 18 நவம்பர் 1905 இல் பிறந்தவர் சங்குசுப்ரமணியம்.
மிகப்பெரிய குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கும் நிலைக்கு ஆளானவர் சங்கு சுப்ரமணியம்.
இன்றைக்கு அரசியலுக்காக பயன்படுத்தப்படும் “தீண்டாமை” என்பதை தன் இளம்வயதிலேயே தீவிரமாக எதிர்த்தவர். தன்னைப்போலவே தீண்டாமையை எதிர்த்து பலருக்கும் உணவளித்து சமூகத்தின் அபச்சொற்களுக்கு ஆளான “சரஸ்வதி” என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டவர்.
வயிற்றுப்பாட்டிற்காக மேட்டுக்குடும்ப குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அக்குழந்தைகள் தங்கள் பாடங்களை சரிவர படிக்கவில்லையென்றால், அவர்களின் எதிரிலேயே ஒரு கம்பை எடுத்து தன்னைத் தானே தண்டித்துக்கொள்ளும் பண்பைக்கொண்டிருந்திருக்கிறார்.
பின் சென்னைக்கு குடியேறி, தரத்தில் மிகவும் சிறந்துவிளங்கிய “சுதந்திரச் சங்கு” என்னும் இதழை தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்து ஆகச்சிறந்த பணியாற்றியுள்ளார். தீவிர தேசபக்தியால் பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரது பத்திரிக்கையின் பின்பாதி பெயரான “சங்கு” என்னும் பெயராலேயே வெகுவாக அறியப்பட்டிருக்கிறார்.
சென்னை இராயப்பேட்டையில் தன் குடும்பத்துடன் வசித்துவந்தபோது, ஒருமுறை சென்னை ஐஸ்ஹவுஸ் (தற்போதைய விவேகானந்தர் இல்லம்) அருகே போராட்டப்பேரணி நடந்தது. அதில் தனது இரு பெண்குழந்தைகளுடன் கலந்துகொண்டிருக்கிறார். கூட்டத்தைக் கலைந்துபோகச்செய்ய போலீஸார் மிரட்டியபோது ஆத்திரமடைந்த சங்குசுப்ரமணியம் தன் சட்டைப்பொத்தான்கலைக் கழற்றி போலீஸாரிடம் தன் நெஞ்சைக்காட்டி “சுடுவியா… சுடு.” என முழங்கியவர். தன்னுடன் போராட்டத்திற்கு வந்திருந்த பெண்குழந்தைகள் குறித்த கவலை மேலிட்டபோதும் மேலும் அதைப்பற்றி யோசிக்காமல் முன்னேறினார். அதனால் போலீஸார் கதிசெய்து அவரை சிறைக்கு கொண்டு சென்றனர். அவரது குழந்தைகள் யார் துணையுமின்றி தனியாக நடந்தே தங்கள் வீடு நோக்கிச் சென்றுள்ளனர். (இன்றைய போலி போராட்டவாதிகளை எண்ணிப் பார்த்தால்…!)
தனது பத்திரிக்கையில் மகாகவி சுப்ரமணிய பாரதியார், தி.சு.செல்லப்பா மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ”பாகவதக்கதைகள்” என்னும் படைப்பை தானே எழுதி தன் பத்திரிக்கையில் வெளியிட்டபோது, அப்போதைய திராவிட கூட்டத்தால் பகிரங்கமான மிரட்டலுக்கு ஆளாகியுள்ளதாக கூறுகிறார்கள்.
”ஜெமினி” திரைப்பட தயாரிப்பு நிறுவன அதிபர் எஸ்.எஸ். வாசனுடன் நெருக்கமானவர் சங்கு.
ஜெமினி கதைக் குழுவில் பல படங்களுக்கு கதை எழுதியவர். சக்ரதாரி, சந்திரலேகா, ராஜி என் கண்மணி” போன்ற படங்களில் கதை, பாடல்கள் என எழுதியுள்ளார்.
”ஸ்ரீராமானுஜர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
சக்ரதாரி படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் பாடலை தெருவில் பாடிவரும் பாகவதராகவும் நடித்திருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் புரட்சியாளர், பத்திரிக்கைத் துறையில் பரபரப்பு காட்டியவர், சுதந்திரப்போராட்டத்தில் தியாகி, திரைப்படத்துறையில் பலபிரிவுகளில் வித்தகர், கதாநாயகன் என புகழ்க்கொடி நாட்டிய சங்குசுப்ரமணியம் அவர்கள் 15 பிப்ரவரி 1969ல் சென்னையில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவிற்குப்பின் தமிழ்ப் பத்திரிக்கை உலகமோ, காங்கிரஸ் கட்சியோ, திரைப்பட உலகமோ இவருக்கு உரிய மரியாதை செலுத்த தவறியது மட்டுமின்றி, மறந்தே போனது வேதனைக்குரியது.
வேர்கள் வெளியே தெரிவதில்லை. உண்மைதானே?!

