ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னை(மெட்ராஸ்)யின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை.
மனித சமூகத்தின் நாகரிக வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மானுடவியலாளர்களும் தொல்லியல் அறிஞர்களும், மனித சமூக வளர்ச்சி நதிக்கரை நாகரிகத்தில் தொடங்கியது என்கிறார்கள். அப்படி இந்தியாவில் நதிகரை நாகரிகங்களாக குறிப்பிடப்படுவது வைகை நதிநாகரிகம், பொருநை நதிநாகரிகம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகங்கள் முக்கியமானதாகும். இந்த வரலாற்று பின்புலங்களுடன் பார்க்கும்போது நன்னீர் ஆறுகளும், கடலும் அமையப்பெற்ற தென்னிந்தியாவின் வாசல் என்றழைக்கப்படும் சென்னை நகரத்திற்கு நீண்டதொரு வரலாற்று பின்புலம் உள்ளது.வ்
பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் தமிழக தலைநகர் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.ஆங்கிலேயரின் வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில் இடம்பெறுகின்றன.அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது.

உண்மையில் சென்னை நிறைய கிராமங்களை விழுங்கிய நகரம். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதி லேக் ஏரியா. முகப்பேர் ஏரித்திட்ட குடியிருப்பு. அயப்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப் பேட்டை, மண்ணூர் பேட்டை, கொண்டித் தோப்பு, எண்ணூர், திருவொற்றியூர், திருநின்றவூர், நங்கநல்லூர் போன்ற பல அழகிய கிராமங்களை நகரம் விழுங்கி ஏடாகூட கூனுடலுடன் துயிலில் உ::ஆது.
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது. சில உணர்வுப்பூர்மான நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை எழுப்பிய இடம்,முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னைப் பட்டணத்தில் நடந்தேறி இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக உருவெடுத்திருக்கிறது.
இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை(மெட்ராஸ்) கொண்டாடப்பட வேண்டிய நகரம். எனவேதான், ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை மெட்ராஸ் தினமாக அறிவித்து, அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர். 1639 ஜூலை 22 என்று ஒருசாரர் வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும், சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படும்.
பல்வேறு தரப்பினரும் தத்தமது விருப்பப்படி குழுவாகவோ, தனியாகவோ சென்னை தின (மெட்ராஸ் டே) கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

