கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் மௌனத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் ஊடகங்களுக்கு முன்னால் கதறி அழுது ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“பெண்கள் எல்லாரும் ஏமாந்த சோணகிரிகள் கிடையாது, 10 மாதம் கருவில் சுமந்து பெற்றெடுத்த அந்த வழி யாருக்குத் தெரியும்? எங்கள் குழந்தைகளுக்கு ஒன்று என்றால் நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கொந்தளித்த அந்தத் தாய், “உங்களைத் திறமையான ஆள் என்றும், நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருப்பீர்கள் என்று நம்பித்தான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களும் இந்த மாபெரும் வெற்றியைத் தந்து முதலமைச்சராக்கினோம்;
நீங்கள் சினிமாவில் காட்டும் வீரத்தையெல்லாம் இப்போது நிஜ ஆட்சியில் மக்கள் முன்னிலையில் காட்ட வேண்டும், எங்களுக்கு நீதி வேண்டும்” என ஆவேசமாக முழக்கமிட்டார். மேலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில் எதற்கெடுத்தாலும் வாய் திறக்காமல் மௌனம் காக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும், அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கூட ஒரு வாழ்த்துச் செய்தி சொல்லாமல் மௌனமாக இருப்பது ஏன் என்றும் திரண்டிருந்த மக்கள் சாடியுள்ளனர்.
உடனடியாகக் குற்றவாளிகளுக்குக் கடுமையான மரண தண்டனை பெற்றுத் தராவிட்டால் கோயம்புத்தூரில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ள உறவினர்களின் இந்தக் கதறல், தற்போது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.
