ஏன் இதை எழுதத்தோன்றியது என்பதை முதலில் கூறிவிடுகிறேன்.
எங்கள் வீட்டின் எதிரே அரசமரம் உண்டு. அங்கு காகங்கள், மைனாக்கள், குயில்கள் போன்ற பறவையினங்கள் குடியிருக்கின்றன.
விடிந்தும் விடியாத காலைப்பொழுதான 5.30 மணியளவில் எளிய உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வது என்வழக்கம்.
அந்நேரத்தில் அந்த பறவைகள் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு நேராக மூன்றாவது மாடியில் (மொட்டை மாடி) இருக்கும் என் வீட்டிற்கு வந்திறங்குவார்கள். அவர்கள் வரும் முன்னரே அவர்களுக்குத் தேவையான பிஸ்கட் அல்லது மணிக்காராப்பூந்தி அல்லது மிக்சர் மற்றும் குடிநீரை தயாராக வைத்துவிடுவது என் வழக்கம். அவர்கள் வந்ததும் பசியாறி, தாகசாந்தி செய்துவிட்டு, அடுத்து அன்றைய தினம் அடுத்த ஷெட்யூலைப்பற்றி விவாதித்து விட்டு ஆளுக்கொரு திசையாக பறந்துவிடுவர். பகல் முழுக்க அவ்வப்போது வந்து செல்வர். அவர்களுக்கு தேவையானதை எப்படியாவது தயார் நிலையில் வைத்துவிடுவேன்.
மேலே குறிப்பிட்ட பறவையினங்கள் மட்டுமின்றி புறாக்களின் படையெடுப்பு அதிகமுண்டு. ஆனால் அவர்கள் குடியிருப்பு எங்கே எனத் தெரியவில்லை. அவர்களுக்கு கோதுமை, ரேஷன் அரிசி, ஆகியவை பரிமாறப்படும்.
கடந்த சில நாட்களாக வருகின்ற காகங்களில் உடல் முழுக்க வேஎறு வண்ணங்களே இல்லாலமல் முழுவதும் கன்னங்கரேலென்ற கருமையில் அண்டங்காக்கைகள் அதிக அளவில் வந்து கொண்டிருந்தன. இது எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது. காரணம், அண்டங்காக்கைகள் மிகவும் அபூர்வமானவை என்றும், அவை நம் பார்வைக்கு அதிகம் தென்படாது என கேள்விப்பட்டுள்ளேன்.
ஆகவே ஒன்றுக்கும் மேற்பட்ட பல அண்டங்காக்கைகள் என் வீட்டு மாடியின் கைப்பிடி சுவர்களில், பக்கவாட்டுச் சுவர்களில், பாத்திரங்கள் துலக்கும் இடத்தில் என சகஜமாக அவை உலா வந்தன. கருமையும், சாம்பல் நிறமும் கொண்ட வழக்கமான காக்கைகளும் எப்பொழுதும் போல் வருகை!
அப்போது மூளைக்குள் ஏதோ பொறிதட்டியது. அண்டங் காக்கைகளைப் பற்றி ஆராயலாம் என இணையத்தில் குதித்து நீச்சலடித்தேன். அப்போது ஒரு சில அபூர்வமான செய்திகள் காக்கை இனத்தைப்பற்றி கிடைத்தன.
அதாவது, பறவையினங்களில் காக்கைகளே மிகவும் அதி புத்திசாலிகள்! அசுத்தங்களை சாப்பிடும் பழக்கமிருந்தபோதும், அவை தூய்மையைப் பேணக்கூடியவையாம்! ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கும் இயல்புடையவைகளாம்! (ஆனால், சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிக்கும் காக்கைகளுக்கு அது சாத்தியமா? எனத் தெரியவில்லை!) ஆனால், எங்கள் வீட்டில் அவர்கள் குடிப்பதற்காக வைத்திருக்கும் தண்ணீர் பாத்திரத்தில் அவ்வப்போது அவர்கள் குளியலாடக் கண்டுள்ளேன். கண் கொள்ளாக் காட்சி அது!
ஒரு சில நேரங்களில் காகம் அரை மைலுக்கும் மேலாக தலைகீழாகப் பறப்பதைக் கண்டிருக்கிறார்கள்.(அடேங்கப்பா!)
இளம் காகங்கள் பறவைகள் குச்சிகளைப் பயன்படுத்தி விளையாடுவதையும், அவற்றை மீண்டும் மீண்டும் கீழே போடுவதையும், பின்னர் அவற்றைப் பிடிக்க காற்றில் டைவ் செய்வதையும் விரும்புகின்றன. (குழந்தைகளின் குறும்பு!)
குளிர்காலத்தில், ஒரு இரையைக் கண்டுபிடிக்கும் இளம் காக்கைகள் மற்ற காக்கைகளை அழைக்கின்றன. தங்கள் ஏரியாவைக் கடந்து இரைதேடிச் செல்லும் காகங்களுக்கு உள்ளூர் காக்கைகள் இடையூறு செய்வதுண்டாம். அப்போது தங்கள் கூட்டத்தை பெரும்பான்மையாகத் திரட்டி எண்ணிக்கையின் பலத்தால், உள்ளூர் உள்ளூர் காகங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவார்களாம். (அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி தங்கள் பெரும்பான்மையைக் காட்டுவது போல!)
இது ஒரு பகல்நேர, இடம்பெயராத, சமூக இனமாகும், மேலும் சத்தமிடும் கூட்டங்களில் கூடி பெரிய கூடுகளை உருவாக்குகிறது. இந்த காகக்கூட்டமானது எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பறவைகளைக் கொண்டிருக்கலாம்.
காகங்களுக்கு கூடு கட்டும்போது கிளிகள் மற்றும் மைனாக்கள் அருகில் இருந்தால் அந்த இன்ங்கள் மீது இவர்களுக்கு துவேஷமில்லை. அனுசரித்துக் கொள்கிறார்காளாம்.
ஒரு காகத்தின் கூடு அதிகபட்சம் 25 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கக்கூடுமாம் பொதுவாக பெண் காகங்களே கூடு கட்டுவதில் அதிக திறமை வாய்ந்தவர்களாம். ஆண் காகங்கள் அதற்கான மெட்டீரியல்களை சேகரிப்பதில் எக்ஸ்பெர்ட்ஸ்! அப்புறமென்ன? 3 மணி நேரத்தில் கூடு ரெடி!
இனப்பெருக்க காலத்தில், முட்டையிட்டு குஞ்சு பொரிக்க அடைகாக்கப்படுகிறது. இந்த நிலையானது, சுமார் 15-17 நாட்கள் நீடிக்கலாம். இது இரு பெற்றோர்களாலும் செய்யப்படுகிறது. ஆனால் இரவில் கண்டிப்பாக தாய்க் காகம்தான் பராமரிப்பு செய்கின்றனவாம்!
”வைட்டமின் டி” பற்றாக்குறையைச் சமாளிக்க காகங்கள் சூரிய குளியல் (sun bath) செய்கின்றனவாம். இன்னும் வியக்க வைக்கும் பல செய்திகள் காகங்கள் குறித்து உள்ளன.
கடினமான இரைவகைகளை அவர்கள் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது ரொம்ப சூப்பர்! தண்ணீரில் போட்டுவிட்டு குறிப்பிட்ட வினாடிகள் காத்திருப்பார்கள். பின் கொத்திப்பார்ப்பது. சரியாக ஊறவில்லையெனில் மீண்டும் ஊறவைப்பது எல்லாமே ஹைலைட்தான்!
சிலநேரங்களில் பிஸ்கட்டுகள் தண்ணீரில் எளிதாக கரைந்து விடும். அப்போது என்னைக்கூப்பிட்டு கேட்பார்கள். நாம் மீண்டும் பிஸ்கட்டுகளை உடைத்துப் போட்டால் குஜாலாக மீண்டும் ஊறவைத்து சாப்பிடுவார்கள்! இவையெல்லாம் இன்றுவரை என் சொந்த அனுபங்களே!
சரி… அண்டங்காக்கையில் ஆரம்பித்து, கூடு கட்டி, குஞ்சு பொரிப்பது வரை சொல்லியாச்சி. இன்னும் கட்டுரையின் தலைப்புக்கு வரவில்லையே என்று சலிப்பு வந்துவிட்டதா? பொறுங்கள்.
இன்றைக்கு சென்னைதான் என்றில்லாமல் பல ஊர்களில் பொது இடங்களில் முத்தமிட்டுக்கொள்வதும், காதலர்கள் கட்டிப்பிடித்துக் கொள்வதும், இடுப்போடு இடுப்பாக அணைத்துக்கொள்வதும், அவையங்களை பிசைந்து கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது! ”திருமண உறவைக்கடந்தவர்கள்” சேட்டைகள் இன்னும் சிலபடிகளுக்கும் மேலே!
இதுகுறித்து ஒருவேளை என்னைக் கண்டிப்பவர்கள் வாருங்கள். நேரடியாகவே சம்பவ இடங்களைக் காட்டுகிறேன். அப்போதாவது தெளிவு பெறுங்கள்.
சரி. விஷயத்திற்கு வருவோம். ஆறறிவையும் தாண்டி, ஏழாம் அறிவையும் எட்டிப்பிடிக்க ஓடும் மனித ஜீவராசிகள் நாகரீகமற்று நடக்கிறார்கள். ஆனால், உலகத்தில் எவருமே காகங்கள் உடலுறவு கொள்வதையுமே கண்டதில்லையாம்!
அந்த அளவிற்கு காகங்கள்”செக்ஸை” புனிதமாக கருதுகின்றனவா? என்னவோ தெரியவில்லை. ஆனல் உண்மை இதுதானாம்! அடடே… என்னவொரு ஆச்சரியம்!
இதேபோல் இன்னொரு உயிரினமும் உண்டாம். அதுதான் யானை இனம்!
— M.Palanivasan
