கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). ஏமன் நாட்டில் ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் மஹ்தியை நிமிஷா கொலை செய்ததாகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
வழக்கை விசாரித்த ஏமன் கோர்ட் கடந்த 2020ஆம் ஆண்டு நிமிஷத்துக்கு மரண தண்டனை விதித்தது. அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏமன் நாட்டின் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கவுன்சில் தள்ளுபடி செய்தது.
தண்டனை உறுதி செய்யப்பட்டதால் நிமிஷாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றம் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. அதே சமயத்தில் மரண தண்டனையை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது. நிமிஷா பிரியாவின் தாயார் பிரேம குமாரி கடந்த ஆண்டு ஏமன் நாட்டுக்கு சென்றார். கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு “குருதி பணம்” என்ற பெயரில் இழப்பீடு கொடுத்து நிமிஷா பிரியாவை விடுவிக்கும் முயற்சியும் நடந்தது. அதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டன.
நிமிஷ பிரியா ஈரான் ஆதரவு ஹவுதி இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது. இருதரப்பும் ஏற்கத்தக்க தீர்வை எட்டுவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க கோரி இந்திய அரசு முயற்சியும் மேற்கொண்டது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணையின் போது கேரள நர்ஸை மீட்பதில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்று மத்திய அரசின் அட்டானி ஜெனரல் வெங்கடரமணி தெரிவித்தார்.
இந்நிலையில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏமன் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஏமன் சிறை அதிகாரிகள் மற்றும் அரசு வக்கீல் ஆகியோர்களுடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் அதனால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

