“காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியுள்ள ஆணவமிக்க பேச்சுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் தற்போதைய தவெக அரசு மற்றும் கர்நாடக காங்கிரஸ் அரசை மிகக் கடுமையாகச் சாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்குப் பயன்பெறும் மாநிலங்களின் அனுமதி தேவை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உரிய நீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை அறிவுறுத்தியும் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக அரசு, தற்போது அணைக்கான பூமி பூஜை வரை பேசியிருப்பது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆட்சி அதிகாரத்திற்காகக் கடந்த ஆட்சியாளர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்திருந்தது போல, தற்போது காங்கிரஸ் கட்சியின் தயவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தன்னுடைய பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க மீண்டும் ஒருமுறை காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் எழுந்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
எனவே, ஆட்சி அதிகாரத்தை விட மாநிலத்தின் உரிமையும், விவசாயிகளின் நலனுமே முக்கியம் என்பதை உணர்ந்து, தமிழகத்தின் டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த முயற்சியை அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட வேண்டும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
