தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படம் ரசிகர்களால் என்றென்றும் கொண்டாடப்படும் ஒரு மாஸ் ஹிட் படமாக இருக்கிறது.
நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி கூட்டணியில் வெளியான இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதுபற்றி ஒரு நேர்காணலில் இயக்குனர் பாரதிராஜா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது, 16 வயதினிலே படம் எடுத்த போது ஃபிலிம் கிடைப்பது கஷ்டம். புக் பண்ணி தான் வாங்க வேண்டும். பெங்களூருக்கு தான் வரும். அங்கிருந்து ஒருவர் வாங்கிக் கொண்டு வரவேண்டும். 1000 அடிதான் கிடைக்கும். அதுவும் 500, 500 அடியாக கிடைக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் பக்கத்தில் இருக்கும் பாக்யராஜிடம் எவ்வளவு அடி ஆகியிருக்கிறது என்று கேட்பேன். ‘5 அடி சார்’ என்பார்.இதையெல்லாம் குறித்துக்கொண்டே வருவோம். இப்படித்தான் படமெடுத்தோம்.
கமல் அப்போது ஓரளவுக்குபிரபலமான நடிகர். ஃபிலிம் எங்களுக்கு வருவதற்கு தாமதமாகிவிட்டது. கமலின் கால்ஷீட் வேஸ்ட் ஆகி விடக்கூடாதே. அதற்காக கேமிராவில் ஃபிலிமே இல்லாமல் அவரை நடிக்க வைத்தேன். 16 வயதினிலே படத்தில், பசங்களெல்லாம் ஓணானை அடிப்பார்கள். கமல் வேண்டாம் என்று சொல்லுவாரே… அந்தக் காட்சி. ட்ராலியெல்லாம் போட்டுவிட்டோம். ஃபிலிம் இல்லை என்பது எனக்கும் ஒளிப்பதிவாளருக்கும் மட்டும்தான் தெரியும்.
இந்த விஷயத்தை கமல் கண்டுபிடித்து விட்டார். அவருக்கு இது தெரிந்து விட நான் ஆடிப்போய்விட்டேன். வேணும்னா பணம் நான் கொடுக்கிறேன். இப்படி எல்லாம் படம் எடுக்கக்கூடாது என்றார். ‘இல்ல இல்ல… பெங்களூர்லேருந்து ஃபிலிம் வந்துக்கிட்டே இருக்கு. பண்ணிடலாம்’ என்று சொன்னேன். இப்படியெல்லாம் நடந்து, எடுக்கப்பட்ட படம் 16 வயதினிலே. அதன் பிறகு, ‘என்ன தேனிக்காரரே… ஃபிலிம் இருக்குல்ல. நடிக்கலாம்லே’ என்று கமல் என்னை கிண்டல் செய்துகொண்டே இருப்பார்.
எல்லோருமே இந்த படத்துக்காக அதிக கஷ்டப்பட்டு உழைத்தார்கள். இதில் ஸ்ரீதேவிக்கு அம்மாவாக காந்திமதி அம்மா. குருவம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அவர்தான் எனக்கு செலவுக்குக் காசு கொடுப்பாங்க. தினமும் சிகரெட் வாங்குவதற்கு காந்திமதி அம்மாதான் காசு கொடுப்பார்கள் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் பாரதிராஜா, தனது 16 வயதினிலே படத்தின் அனுபவங்களை நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும் இந்த படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் 16 வயதினிலே அல்ல. மயிலு என்றுதான் டைட்டில் வைத்திருந்தேன். ஏனென்றால் படத்தின் நாயகி ஸ்ரீதேவி கேரக்டர் பெயர் மயிலுதான். படம் மொத்தமும் மயிலு கேரக்டரை மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு இந்த படத்துக்கு 16 வயதினிலே என்று டைட்டில் மாற்றப்பட்டதாகவும் இயக்குனர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

