இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக அங்கு உச்சக் கட்ட பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருவதால், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய குடிமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், தெஹ்ரானில் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தெஹ்ரானில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் மீண்டும் ஒரு அறிவுறுத்தலை விடுத்துள்ளது. இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: –
தெஹ்ரானில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய குடிமக்கள் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். இந்திய குடிமக்கள் உடனடியாக தூதரக் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம். தெஹ்ரானில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும், இதுவரை தூதரகத்தை தொடர்பு கொள்ளாதவர்களும் உடனடியாக : +989010144557; +989128109115; +989128109109,” என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் போருக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜி7 மாநாட்டை முடிப்பதற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், டிரம்ப் ஒரு நாள் முன்னதாகவே வெளியேறினார். வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்ததே இந்த முடிவுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. நான் சீக்கிரம் திரும்ப வேண்டும், அதற்கான காரணங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே என்று செய்தியாளர்களிடம் டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்ப் உடனடியாக தெஹ்ரானை காலி செய்யுமாறு ஈரான் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

