Home செய்திகள் நிதி நெருக்கடிக்கு சாக்குப்போக்கு வேண்டாம்; தீர்வு காணுங்கள் – அரசுக்கு அண்ணாமலை அறிவுரை!

நிதி நெருக்கடிக்கு சாக்குப்போக்கு வேண்டாம்; தீர்வு காணுங்கள் – அரசுக்கு அண்ணாமலை அறிவுரை!

₹10 லட்சம் கோடி கடன் சுமை; அரசின் செயல்பாடே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த தவெக (TVK) அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையைத் தான் ஆய்வு செய்ததாகவும், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும் பாஜக மூத்த தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் தவறான நிதி நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள சீரழிவை இந்த வெள்ளை அறிக்கை அம்பலப்படுத்தியிருப்பதுடன், மற்ற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் முக்கிய நிதி குறிகாட்டிகள் எவ்வளவு பின்தங்கியுள்ளன என்பதையும் இது காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ₹10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இதனால் தனிநபர் கடன் சுமை ₹1,28,934 ஆக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, மாநிலத்தின் மொத்த வருவாயில் 22.8 சதவீதம் வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம் கடந்த 2021-22 இல் 5.93 சதவீதமாக இருந்தது, 2025-26 இல் 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளதையும், மின்சாரம், போக்குவரத்து மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் போன்ற முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) ஒட்டுமொத்தமாக ₹3.18 லட்சம் கோடி கடனில் தவிப்பதையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

திட்டமிட்ட ஊழல், ரியல் எஸ்டேட் விலைகளைக் குறைத்து மதிப்பிட்டுப் பதிவுத்துறை வருவாயை முடக்கியது போன்ற காரணங்களால் மாநிலத்திற்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உழைக்கும் வயதினரின் மக்கள் தொகை சுருங்கிவிடும் சூழல் உள்ளதால், மாநிலத்தின் வருவாய் ஆதாரத்தை மீட்டெடுத்து வலுப்படுத்த மிகக் குறைந்த காலமே உள்ளது என்றும், இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் எச்சரித்துள்ளார்.

எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காட்டித் தங்களின் செயல்பாடின்மைக்குக் சாக்குப்போக்கு தேடாமல், ஏற்பட்டுள்ள நிதிப் பாதிப்புகளைச் சரிசெய்யும் வழிகளை ஆராய வேண்டும் என்றும், இந்த நிதி நெருக்கடியைக் கையாள்வதற்குக் கல்வித்துறையினர், பொருளாதார வல்லுநர்கள் மட்டுமன்றி அனைத்துத் துறை நிபுணர்களையும் உள்ளடக்கிய ஒரு “செயல்பாட்டு” ஆலோசனைக் குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version