Thursday, March 12, 2026
HomeUncategorizedஏ. எம் ராஜா நினைவஞ்சலி

ஏ. எம் ராஜா நினைவஞ்சலி

இன்று ஏராளமான பாடல்கள் புதிதாக வந்து கொண்டே இருந்த போதிலும், பழைய பாடல்களின் இனிமை அதில் வருமா? பழைய பாடல்களில் குறிப்பாக ஏ. எம். ராஜாவின் பாடல்களில் சொக்கிப் போகாதவர்கள் யார்..? கற்கண்டும் தேன் சுவையும் கலந்தது போன்றவை ராஜாவின் பாடல்கள்.

அதிலும் குறிப்பாக நடிகர் ஜெமினி கணேசனுக்காக ராஜா பாடிய பாடல்களுக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.”ஆடாத மனமும் ஆடுதே; ஆனந்த கீதம் பாடுதே..” என்ற ராஜாவின் தேனிசைப் பாடலுக்கும் ஜெமினி கணேசனின் அழகு முக அபிநயத்துக்கும் மயங்காதவர் யார்..? Aemala Manmadharaju Rajah. இந்த நீண்ட பெயரின் சுருக்கெழுத்து தான் ஏ.எம். ராஜா.

1929-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ராமச்சந்திரபுரம் தான் ஏ.எம். ராஜாவின் பிறப்பிடம். தெலுங்கு தான் இவரது தாய்மொழி. ஆனால், இவர் தமிழில் பாடிய அத்தனை பாடல்களும் தேன்மொழி. அதற்கு ஒரு உதாரணம், அமரதீபம் படத்தில் வரும் ‘தேன் உண்ணும் வண்டு’.

மேட்டுக்குடிகளிடம் வசித்து வந்த கர்நாடக இசையை, ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன் போன்ற மேதைகள் கைபிடித்து பாமரர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

கர்நாடக இசையைக் கேட்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு, வட இந்திய பாடல்கள், குறிப்பாக, கஜல் பாடல்களின் பாணியைக் கையாண்டு, தமிழ் ரசிகர்களுக்கு புது சுவையை அறிமுகப்படுத்தினார்

ஏ.எம். ராஜா. ஹிந்தி திரைப்படப் பாடல் உலகின் இணையற்ற சக்கரவர்த்தி முஹமது ரஃபீயின் பாடும் முறைகளை ஒற்றியெடுத்துக் கொண்டார் ஏ.எம். ராஜா. அதை, இன்பத் தீயாய் பற்ற வைத்தார் ரசிகர்களின் மனதில். முறையான இசைப்பயிற்சி.

முழு ஈடுபாட்டுடன் தொழிற் பயிற்சி. கம்பீரமான குரலில் ஒரு மென்மை கலந்த பெண்மை. படிக்கட்டில் உருட்டிவிட்ட நாணயத்தைப்போல் நளினமான சத்தம். குழந்தையைத் தூங்க வைக்கும் தாயின் தாலாட்டில் உள்ள ஸ்பரிசம்.

இதுதான் ஏ.எம். ராஜா. திரையுலகில் காதல் மன்னனாகக் கோலோச்சிய ஜெமினி கணேசனின் “வாய்மொழி”யாக வலம் வந்தார் ஏ.எம். ராஜா. முக்கோணக் காதல் கதையின் முதல்தர கதாநாயகனாக இருந்த இயக்குநர் ஸ்ரீதர்தான், பின்னணிப் பாடகரான ஏ.எம். ராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார்.

படம், கல்யாணப் பரிசு. காலமெல்லாம் மறக்க முடியாத இந்தக் கல்யாணப் பரிசுக்காக, ஏ.எம். ராஜா தந்த பாடல் பரிசு, இசை ரசிகர்களின் மனம் என்னும் அலமாரிகளில், இன்றும் அலங்காரமாக வீற்றிருக்கின்றன.

ஆண் குயில், பெண் குயில் மீது இயல்பாகக் கொள்ளும் ஈர்ப்பைப்போல, அழகியலைப் பாடலோடு குழைத்துத் தரும் ஏ.எம். ராஜாவும், பின்னணிப் பாடகி ஜிக்கியும் வாழ்க்கையிலும் இணைந்தனர்.

இந்த இசைக் குயில்கள், பாட்டு வானில் சிறகடித்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தன் குழுவினருடன் ரயிலில் சென்னை திரும்பிக்‍ கொண்டிருந்தார் ஏ.எம். ராஜா.

வள்ளியூர் என்ற இடத்தில் ரயிலை விட்டு கீழே இறங்கி மீண்டும் ரயில் ஏறியபோது ரயில் புறப்படவே, தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். புகழ் மணம் வீசிய புதையல் குரலை, புகைவண்டியின் சக்‍கரங்கள் அள்ளி அணைத்துக்‍ கொண்டு பூமிக்‍குள் அடக்‍கம் செய்தது.

எவ்வழி வந்தாலும் வலி நிறைந்ததுதான் மரணம். ஏ.எம்.ராஜா போன்ற திரை இசை தீபத்தை அணைத்துவிட்ட மரணத்தை என்றுமே மன்னிக்‍க முடியாது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments