தவெக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்: தொண்டர்களுக்கு இபிஎஸ் அவசர அறிக்கை!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது என்றும், அஇஅதிமுகவின் பலத்தை யாராலும் அழிக்க முடியாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களுக்கு தைரியம் ஊட்டி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 1 கோடியே 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளையும், கூட்டணியோடு இணைந்து 1 கோடியே 34 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளையும் பெற்று மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் மக்கள் முழு பெரும்பான்மை வழங்காத நிலையில், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு என்பது ஒரு ‘பொய்க்கால் குதிரை அரசு’ என்றும், பதவி ஆசை காட்டியும் குதிரை பேரம் நடத்தியும் அதிமுகவின் சில நிர்வாகிகளைப் பிரிக்க தவெக சதித் திட்டம் தீட்டியது வேதனையான உண்மை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளின் வழியில் வந்த இந்த இயக்கம், இதைவிடப் பெரிய சோதனைகளையும் துரோகங்களையும் கடந்து மீண்டு வந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ள இபிஎஸ், தவெக அரசு அமைத்துள்ள இந்த ஐந்து கட்சிகளின் கூட்டணி நாடகம் சில காலம் மட்டும்தான் நீடிக்கும் என்றும், தொண்டர்கள் யாரும் விட்டில் பூச்சியாக வீழ்ந்துவிடாமல் ஒற்றுமையுடன் உழைத்து மீண்டும் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ நிறைந்த அம்மாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்றும் தனது அறிக்கையில் மிக ஆக்ரோஷமாகப் பதிவு செய்துள்ளார்.
