ஞான பூமி
உலகம் முழுவதும் ஆங்காங்கே தோன்றுவோர் எத்தனையோ பேர் தத்துவ கருத்துக்களை அள்ளித் தெளித்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வாழ்ந்த பூமியும் இறைவனின் படைப்புதான்.
ஆனால் அவர்களுக்கு; அவர்களின் மண்ணிற்கு இல்லாத அரிய பல சிறப்புகள் நமது தாய்பூமியான பாரத நாட்டிற்கு உண்டு.
எதனால் அப்படி?
ஆம். பாரத துணை கண்டத்தில்தான் வரையறை செய்ய இயலாத பழமையான காலத்தில் “நான்மறைகள்” தோன்றின. அவற்றிற்கு விளக்கவுரைகள் தரப்பட்டுள்ளன. இங்கேதான் எண்ணிலடங்கா மகரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், ஆன்மீக குருமார்கள் என ஆண்டாண்டு காலமாக அவ்வப்போது தோன்றினர். அவ்வகையில் இன்றும் அவ்வப்போது தோன்றிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவருமே சுயநலம் இல்லா சுத்த ஆன்மாக்களாக இந்த மண்ணிற்கு மட்டுமின்றி, உலகத்தின் அனைத்து ஜீவராசிகளின் மேன்மைக்காக வழிகாட்டி வருகின்றனர். இதனாலேயே பாரதம் புண்ணிய பூமி என பெயர் பெற்றுள்ளது. இன்றும் உலகின் ஞான குருவாக விளங்கி வருகிறது. சனாதனம் என்று சொல்லப்படக்கூடிய வாழ்வியல் கலாச்சாரக் கோட்பாடுகளில் எவ்வளவு விஞ்ஞானம்! எவ்வளவு தொலைநோக்குப்பார்வை ! அவை அனைத்தையும் சடங்குகள்; சம்பிரதாயங்கள் எனும் கோர்வைகளால் வகுத்தளித்து எளியோரும் கடைப்பிடிக்கும் வண்ணம் செய்த வல்லமை!
ஏன் இங்கு மட்டும் இத்தகைய சிறப்புகள் மண்டிக் கிடக்கின்றன?