தற்போதைய தேர்தலில், மாநில கட்சிகளும் அதிகளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளன. இதன் காரணமாக, ஹெலிகாப்டர் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.
ஹெலிகாப்டர்கள் மணிநேர அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. ஏழு நபர்கள் அமரக்கூடிய ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டருக்கான ஒரு மணி நேர வாடகை, 1.30 – 1.50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
எட்டு நபர்கள் அமரக்கூடிய இரட்டை என்ஜின் ஹெலிகாப்டருக்கான கட்டணம் 2.30 – 3.00 லட்சம் ரூபாய். 15 பேர் வரை அமரக்கூடிய ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேர கட்டணம், 4 லட்சம் ரூபாய் முதல் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து நிபுணர்கள் தெரிவித்ததாவது: கடந்த தேர்தலின் போது, வழக்கத்தை விட 20 முதல் 30 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். இந்த தேர்தலில் கூடுதலாக 50 சதவீதம் வரை வசூலிக்கின்றனர். ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையில், மாநில கட்சிகளின் ஆர்வத்தால் தேவை அதிகரித்துள்ளது. அனைத்து விதமான ஹெலிகாப்டர்களையும் கணக்கில் கொள்ளும் பட்சத்தில், மொத்தம் 200 ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த தேர்தல் காலகட்டத்தில், இவற்றின் வாயிலாக குறைந்தபட்சம் 350 முதல் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருக்கும். தேர்தல்களின் போது, ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 45 – 60 நாட்கள் வரையிலான நீண்ட கால வாடகைக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. குறிப்பாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்கூட்டியே வாடகைக்கு எடுத்து விடுகின்றன.
மேலும் இத்தகைய ஒப்பந்தங்களில் குறைந்தபட்ச உத்தரவாத மணிநேரமாக, ஒரு நாளுக்கு இரண்டரை முதல் மூன்று மணி நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், இந்த நேரத்திற்கான கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும். எனவே, 60 நாட்களுக்கு வாடகை எடுக்கப்படும் பட்சத்தில், நிச்சயம் 180 மணிநேரத்துக்கான பணத்தை செலுத்தியாக வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு 3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என்ற பட்சத்தில், 180 மணி நேரத்திற்கு, குறைந்தபட்சம் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டியது இருக்கும்.

