Skip to main content

எப்பவும் கூட்டு, பொரியல்னு செஞ்சு போர் அடிக்குதா? அப்போ ஒரு முறை முருங்கைக்கீரை சட்னி செஞ்சு பாருங்க!

Drumstick chutney

பொதுவாகவே கீரை வகைகளை குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் பெரும்பாடு ஆகிவிடும். கூட்டு பொரியல் என்று செய்து கொடுத்தால் அதனை ஒதுக்கி ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் காலை மற்றும் இரவு டிபன்களுக்கு  தேவையான சட்னி வகைகளை ஒதுக்க வாய்ப்பே இல்லை. அதனால் முடிந்தவரை கீரை வகைகளையும், காய்கறிகளையும் சட்னியாகவோ அல்லது சூப் மாதிரியோ கொடுத்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும். 

 பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய முருங்கைக் கீரை, குழந்தைகள் சாப்பிடுவதில்லை காரணம் அதில் இருக்கும் கசப்பு தன்மையாகும். ஆனால் கசப்பே தெரியாமல் முருங்கைக்கீரை சட்னி அரைத்தால் எப்படி இருக்கும் ஒருமுறை அப்படி செய்து கொடுத்து பாருங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைத்துவிடும். 

முருங்கைக்கீரை சட்னி செய்ய தேவையான பொருட்கள் 

முருங்கைக்கீரை-  இரண்டு கப் 
கடலைப்பருப்பு- ஒரு டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு- ஒரு டீஸ்பூன் 
புளி- சிறிதளவு 
வெங்காயம்- ஒன்று 
தக்காளி- ஒன்று 
பூண்டு- சிறியது 
இஞ்சி- ஒரு துண்டு 
உப்பு- தேவையான அளவு 
காய்ந்த மிளகாய்- காரத்திற்கு ஏற்ப 
கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு 


 செய்முறை

 வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, ஆகியவற்றை சுத்தம் செய்து கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

 வாணலியை சூடு செய்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும்,  கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்ந்து வறுத்துக் கொள்ளவும்.

 அதன் பிறகு அதனுடன் தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, புளி, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி (தேவைப்பட்டால் தேங்காய் துருவல்) சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அவை நன்றாக வதங்கிய பிறகு கழுவிய முருங்கைக் கீரையை அதில் போட்டு வதக்கவும். (அதிக நேரம் வதக்க கூடாது கசப்புத்தன்மை ஏற்படும்), கலவையை ஆற வைக்க வேண்டும்.

 கலவை ஆறிய பிறகு  அந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்(தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்). அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். 

பிறகு, தாளிக்க ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்க்கவும், கடுகு பொறிந்த உடன் சிறிதளவு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் வதங்கிய தாளிப்பை சட்னியில் சேர்க்கவும்.

 சுவையான முருங்கைக்கீரை சட்னி ரெடி. இதனை இட்லி தோசை மட்டும் இல்லாமல்(தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால்) துவையல் போல் சூடான சாதத்திலும் சேர்த்து சாப்பிடலாம்.