பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் பொழுது என்ன ஸ்நாக்ஸ் கொடுப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? அப்போ இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்து பாருங்க குழந்தைகள் அசந்து விடுவார்கள். இது மாம்பழ சீசன் என்பதால் ஒரு மாம்பழத்தை வைத்து மாம்பழ போளி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
உப்பு – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – சிறிது
எண்ணெய் – 3 டீஸ்பூன்
மாம்பழம் – 1
நெய் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
சர்க்கரை – 4 டீஸ்பூன்
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்து அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கையால் நன்கு கிளறி விட வேண்டும்.
2.எண்ணெய் கொஞ்சம் ஊற்றி பிசுபிசுப்பான பதத்தில் பிசைந்து மூன்று ஸ்பூன் வரை எண்ணை ஊற்றி அப்படியே 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
3.மாம்பழத்தை எடுத்து அதன் சதைப்பகுதியை மட்டும் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கரண்டியால் மசித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
4.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் துருவிய தேங்காய் வறுத்துக்கொள்ள வேண்டும். அதில் மசித்து வைத்த மாம்பழத்தை சேர்த்து அத்துடன் 4 டீஸ்பூன் வரை சர்க்கரை சேர்த்து நன்கு கிளரி விட வேண்டும். மாம்பழ கலவை ஆனது அல்வா போன்ற பதத்திற்கு வந்ததும், அதை இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாழை இலையில், சாதாரண போளியை எப்படி நாம் தட்டிக் கொள்வோமோ அதுபோல இந்த கோதுமை மாவை எடுத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே சிறிது மாம்பழ கலவை வைத்து மூடி, கையில் எண்ணெய் அல்லது நெய் தடவி போளி போன்று நன்கு தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் தோசை கல் சூடானதும் தட்டி வைத்துள்ள போளியை அதில் போட்டு நெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான மாம்பழ போளி தயார்.
மாம்பழ சீசனில் மாம்பழத்தை அப்படியே சாப்பிடாமல் இதுபோல் வெரைட்டியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்

