குழந்தைங்க உங்க பேச்சை கேட்கவே மாட்டேங்கிறாங்கன்னு கவலையா இருக்கா? அதுக்கு முதல் தீர்வு குழந்தைங்களுக்கு பிடிச்ச மாதிரி நம்ம நடந்துக்கிறது தான். குழந்தைகளுக்கு நம்ம எப்படி பிடிச்ச மாதிரி நடக்கிறது.. சில டிப்ஸ் இருக்கு பார்க்கலாமா?
குழந்தைகளுக்கு பிடித்த பெற்றோராக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களிடம் நம் எப்பொழுதும் அன்பாகவும், நம்பிக்கையுடனும் அரவணைப்பாகவும் இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் பாராட்ட வேண்டும். அவர்கள் நினைக்கும் ஒவ்வொரு எண்ணங்களையும், உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்களுடன் நேரத்தை செலவழித்து அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எப்பொழுதும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேச வேண்டும். எதிர்மறையான, தவறுதலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.
குழந்தைகளுடன் அடிக்கடி விளையாட வேண்டும். இதன் மூலம் அவர்களுடன் நம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். அவர்களுடன் சேர்ந்து பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, புத்தகங்கள் படிப்பது, படித்த புத்தகங்களை பற்றி அவர்களுடன் உரையாடுவது என்று அவர்களிடத்தில் நேரத்தை செலவழிக்கும் பொழுது இருவருக்கும் இடையே இருக்கும் உறவு பலமாக மாறும். எப்போதும் பாசிட்டிவான விஷயங்களை பேச வேண்டும்.
குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் கோபமாக இருக்கும் போது அவர்கள் பேசும் வார்த்தைகளை அமைதியாக கேட்டுக்கொண்டு, பிறகு அதன் காரணத்தை புரிந்து கொண்டு அவர்களிடத்தில் அதனை விவரிக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் விஷயங்களை பாராட்ட வேண்டும். இதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சாதாரண சின்ன சின்ன விஷயங்களில் கூட பாராட்ட மறக்கக்கூடாது.

குழந்தைகளிடத்தில் பெற்றோராக இல்லாமல் நண்பர்களாக பழகுவதன் மூலம் அவர்களிடம் இருந்து நம் நம்பிக்கையை பெற முடியும். இதனால் அவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். அவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலையில் அக்கறை காட்ட வேண்டும். குழந்தைகளிடத்தில் பொறுமையாக இருப்பது மிகவும் அவசியமானது. தவறு செய்துவிட்டால் அவர்களை திட்டவோ, அடிக்கவோ செய்யாமல் கொஞ்சம் பொறுமைகாத்து அமைதியாக எடுத்து சொல்ல வேண்டும். அவர்களின் தனிமையை மதிக்க வேண்டும். அவர்களுக்கென்று சில சுதந்திரத்தை கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து இதனை செய்து வந்தால் குழந்தைகளுக்கு நம் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டு, நாம் சொல்லும் விஷயத்தில் அக்கறை காட்ட தொடங்குவார்கள். அப்போது நாம் என்ன விஷயம் சொன்னாலும், நம் நன்மைக்காக என்பதை புரிந்து கொண்டு, நாம் சொல்லும் பேச்சை கேட்க தொடங்குவார்கள்.

