Home செய்திகள் “இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?”- சிறப்பு கட்டுரை!

“இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?”- சிறப்பு கட்டுரை!

இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?

மு.பழனிவாசன்

            பல்வேறு திரைப்படங்களில் ஹீரோக்கள் பேசும் “பஞ்ச்”வசனங்களைவிட, துணை கதாபாத்திரங்கள் போகிற போக்கில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் வசனங்களை சொல்லிவிட்டுப் போவதுண்டு. அது மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும். ஆக, சொல்லப்படும் வசனத்திற்கான “இடம், பொருள், ஏவல்” ஆகியவையே முக்கியம். அதேபோல் “சொலவடைகள்” இதை யார்? எப்போது? சொன்னார்கள் என்பதை அறிய முடியாது. ஆனா, அதன் கருத்துகள் அந்தந்த இடம், பொருள், ஏவலுக்கு தக்கபடி பொருந்திவிடும். பெரும்பாலும் சொலவடைகள் கிண்டல், கேலி, நையாண்டி எல்லாம் அவை சொல்லவரும் கருத்துகளுடேனே கலந்து வரும். சில அறிவுரையாக அமைந்திருக்கும். அப்படித்தான் சமீபத்தில் சுண்டல் சுற்றப்பட்ட பழைய நூலின் (புத்தகம்) பக்கத்தில் ஒரு சொலவடையைப் படித்தேன். அது சுண்டலின் மிளகாயைக் கடித்தபோது ஏற்பட்ட “சுருக்” உணர்வைவிட, தூக்கலாக அசத்தியது. இதோ அந்த சொலவடை:

“கேட்டதை எல்லாம் நம்பாதே

நம்பியதை எல்லாம் சொல்லாதே”

இக்காலத்தில் யூ ட்யூப், கூகுளில், வாட்ஸப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் இருந்து காப்பி & பேஸ்ட் செய்து ஃபார்வேர்ட் செய்து தன்னையும் அறிவாளியாக காட்டிக்கொள்பவர்கள், ”நானும் ரவுடிதான்” என்பது போல அடிப்படைத் தகுதிகளே இல்லாமல் தங்களையும் பத்திரிக்கையாளர்களாக கருதிக்கொள்பவர்கள், பரபரப்பிற்கோ, ஆவேச உணர்ச்சிக்கோ அல்லது வன்மத்திற்கோ ஆட்பட்ட எந்த ஒரு தனிமனிதருக்கும் இது மிகவும் கச்சிதமாக பொருந்தும்.

பொதுவாகவே தெரிந்தோ தெரியாமலோ வதந்தியைப் பரப்புவதில் சிலருக்கு அலாதியான ஆர்வமுண்டு. அந்த வதந்தி சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்வதேயில்லை.

பெரும்பாலான உறவுகள், பெரும்பாலான நட்புகள் சீரழிந்து போவதும் மேலே சொல்லப்பட்ட சொலவடையின் கருத்துப்படிதான்.

மேலும் எனக்குள் அந்த சொலவடை ஒரு குறுகுறுப்பை உண்டாக்கியது. அதாவது, ”இதை வேறுவகையில் கேட்டதுபோல் இருக்கிறதே!” என்கிற சிந்தனை ஓடத்தொடங்கியது.

அடடே.. கண்டுபிடித்தாயிற்று! நம் திருவள்ளுவர்தான் ஏற்கனவே இந்த சொலவடையின் ஒரு பகுதியை சொல்லியிருக்கிறார்!  

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (குறள் – 423)     என்கிற குறள்தான் அது.

“கேட்டதை எல்லாம் நம்பாதே” என்பதிலேயே,

ஒருவர் தான் கேட்பவற்றின் உண்மைப்பொருளை உணர வேண்டும் என்கிற பொருள் வந்துவிடுகிறது.  

அடுத்ததாக,

”நம்பியதை எல்லாம் சொல்லாதே” என்பதில்,

 அடக்கமுடமை, தன்னிலை அறிதல், சீர்தூக்கிப் பார்த்தல், சிந்தனை செய்வதில் செழுமையடைதல், சுற்றம் நட்பு, சமூகம் ஆகியவற்றின் நலம் பேணுதல் ஆகிய அனைத்தும் அணி வகுக்கின்றன.

            தமிழ் மூதாட்டி ஒளவை “கடுகைத்துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத்தரித்த குறள்” என திருக்குறளின் பெருமையை உணர்த்தினாள்.

            ஆயினும், “அணுவைத்துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத்தரித்த குறள்” என்று கட்டியம் கூறும் அளவிற்கு மேற்படி சொலவடை அமைந்துள்ளது. ஆம். மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதோடு திருவள்ளுவர் நின்று விடுகிறார். ஆனால், இந்த சொலவடையானது, திருவள்ளுவரின் கருத்தையும் தாண்டி ஒருபடி மேலே சென்று, மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டதால், அதுவே சரியென ஆகிவிடாது. ஆகையால் அதை உடனே வெளியில் சொல்லிவிடக்கூடாதென மக்களை எச்சரிக்கிறது. (இதைக்கூறுவதால் திருவள்ளுவ நாயனாருக்கு என்னை எதிரியாக கருதிவிடாதீர்கள்) இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தானே?

            சரி.. திருவள்ளுவர் சொன்னதுபோல் மெய்ப்பொருளை உணரவேண்டும். சொலவடையில் சொல்லப்பட்டபடி வெளியிலும் சொல்லக்கூடாது. அப்படி என்றால் “என்னதாங்க செய்யிறது?” என்று நீங்கள் கடுகடுப்பது புரிகிறது.

அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது அடுத்த சொலவடை:

            ”கண்ணால் காண்பதும் பொய்

 காதால் கேட்பதும் பொய்

 தீர விசாரிப்பதே மெய்”.

”சே..சே…. இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க? ”என்று கேட்கத்தோன்றுகிறதா?

”கேக்குற எல்லாத்தையும் அப்படியே நம்பாம, அங்ஙன, இங்ஙன நல்லா விசாரிச்சு, உண்மையான செய்தியை தெரிஞ்சிக்கிட்டு, பொது வெளியில் அதுக்கப்புறம் மத்தவங்ககிட்ட சொல்லணும்”

இவ்வளவுதான் விஷயம்…

மு.பழனிவாசன்

Exit mobile version