பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டா சென்னை போலீஸ் கமிஷனர் அருணை கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி நேரில் சந்தித்து புகார் அளித்தார். தன் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வந்தும் தனது புகார் மீது போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது சமூக வலைதளம் மூலமாக கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகம் சார்பில் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் படி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் துணை கமிஷனர் வழித்தடம் முன்னிலையில் ஜாய் கிரிசல்டா நேற்று ஆஜரானார்.
நேற்று காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் மாதப்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கியது குறித்து ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார். விசாரணை முடிந்து வெளியே வந்த ஜாய் கிரிசல்டா கூறும்போது,” விசாரணையில் என்னிடமிருந்த ஆதாரங்களையும், சில முக்கிய தகவல்களையும் கொடுத்திருக்கிறேன். எனக்கும் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நீதி வேண்டும், இந்த பாவம் மாதம்பட்டி ரங்கராஜை சும்மா விடாது. அவர்கள் மீது நிச்சயம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள், எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்று கூறி சென்றார்.

