Thursday, February 5, 2026
HomeUncategorized’கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்! - பிரபலங்கள் பாராட்டு

’கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்! – பிரபலங்கள் பாராட்டு

விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தார்கள்.

kannappa

படம் பார்த்த பிரபலங்கள் அனைவரும் ‘கண்ணப்பா’ திரைப்படம் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக இருப்பதோடு, புதிய உலகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பாக இருக்கிறது, என்று பாராட்டினார்கள். குறிப்பாக நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பராக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது குழந்தை தனமான நடிப்பு வெகுவாக கவர்கிறது, என்று தெரிவித்தனர்.

பிரபு தேவா படம் குறித்து கூறுகையில், “மோகன் பாபு சார் மற்றும் விஷ்ணு மஞ்சு எனக்கு சகோதரர்கள் போல், அவர்களிடம் அப்படிதான் நான் பழகுவேன். இந்த படத்தை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது, அந்த அளவுக்கு செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் நாமும் கதையோடு பயணிக்க தொடங்கி விடுகிறோம், பிறகு அதில் இருந்து நம்மாள் வெளியே வரவே முடியாது. படம் மிக சிறப்பாக பயணிக்கிறது, நிச்சயம் இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.” என்றார்.

நடிகை ராதிகா படம் குறித்து கூறுகையில், “என் தந்தை கடவுள் மறுப்பாளர், அவரிடம் நான் ஒரு நாள் கடவுள் இருக்கிறாரா? என்று கேட்ட போது, நீ நினைப்பது தான், என்று சொன்னார். இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு அவர் நினைவு வந்தது. ஆன்மீக படமாக இருந்தாலும் பக்தி என்றால் என்ன? என்பதை மிக அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்கள். விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு அபாராமாக இருக்கிறது. திண்ணன் மற்றும் கண்னப்பராக அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.” என்றார்.

kannappa

இயக்குநர் பி.வாசு படம் குறித்து கூறுகையில், “கண்ணப்பா படம் அனைத்து சிவபக்தர்களும் பார்க்க வேண்டிய படம். சிவபக்தர்கள் மட்டும் அல்ல அனைவரும் பார்க்க வேண்டிய படம். படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், தெரியாத பல விசயங்களை பிரமாண்டமாக சொல்லியிருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கும், கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் கதை மிக சுவாரஸ்யமாக இருந்தது. படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

kannappa

அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம் படம் குறித்து கூறுகையில், “இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படம் ‘கண்ணப்பா’. மக்களை நல்வழிப்படுத்த இதுபோன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும். மோகன் பாபு அவர்கள் படத்தை பிரமாண்டமாக மட்டும் இன்றி மிக சிறப்பாக தயாரித்திருக்கிறார். விஷ்ணு மஞ்சுவின் நடிப்பி பிரமாண்டத்திற்கு இணையாக இருக்கிறது. இந்த படத்தை பள்ளி மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.” என்றார்.

நடிகர் சரத்குமார் கூறுகையில், “கண்ணப்பா போன்ற திரைப்படங்கள் தற்போதைய காலக்கட்டத்திற்கு தேவையான ஒரு படம். நான் இதில் நடித்திருப்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த படத்திற்காக படக்குழு உழைத்திருப்பது மிகப்பெரியது. வெளிநாட்டில் இவ்வளவு பெரிய குழுவுன் பணியாற்றியிருப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. இன்று அவர்களின் உழைப்பின் பலனாக கண்ணப்பா திரையிட்ட இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு மக்களிடம் பாராட்டுக்களை பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

kannappa

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் பாபு படம் பேசுகையில், “நான் கஷ்ட்டப்படும் காலங்களில் சோறு, தங்க இருப்பிடம் கொடுத்தது தமிழ்நாடு தான். என் மூன்று பிள்ளைகளும் இங்கு தான் பிறந்தார்கள். விஷ்ணு மஞ்சுவை ராதிகாவுக்கு சிறுவயதில் இருந்தே தெரியும், அவர் போல்டான டஃப்பான லேடி, என்னுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சரத்குமாரின் நாட்டாமை படத்தை தான் நான் பெத்தராயுடு என்று தெலுங்கில் எடுத்தேன். கடந்த மூன்று வருடங்களாக நானும் சரத்குமாரும் மிக நெருக்கமாக சகோதரர்களை போல் பழகி வருகிறோம். பிரபுதேவா என் தம்பி போல், அவர் எனக்காக இந்த படத்தில் பணியாற்றினார். 

‘கண்ணப்பா’ படத்திற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதிகமான பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தாலும், கண்ணப்பாவாக மக்கள் மனதில் நின்றிருக்கும்  விஷ்ணு மஞ்சு இதற்காக கடினமாக உழைத்தார், அவரது உழைப்புக்கு கிடைத்த பலன் தான் இந்த வெற்றி. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments