Home Uncategorized கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வைப்புநிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் துவங்கிவைத்தார்.

கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும், உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும் இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  துவங்கிவைத்தார். இந்த நிவாரண உதவிகள் தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளனர். இதன்படி தமிழக அரசு வழங்கும் ரூ.5 லட்சம் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும்.

குழந்தைகளின் 18 வயது வரையில் இந்த பணம் அங்கேயே இருக்கும். 18 வயது நிறைவு அடைந்தவுடன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வட்டியுடன் அந்த பணம் கிடைக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது தவிர கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி கல்வி தொடர்பான அறிவிப்புகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதில் பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை கலெக்டர்கள் தயார் செய்து வருகின்றனர். படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version