Home செய்திகள் கர்நாடகாவில் அரை ஹெல்மெட்டுகளுக்குத் தடை: புத்தாண்டு முதல் முழு ஹெல்மெட் கட்டாயம்!

கர்நாடகாவில் அரை ஹெல்மெட்டுகளுக்குத் தடை: புத்தாண்டு முதல் முழு ஹெல்மெட் கட்டாயம்!

இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கர்நாடக அரசு போக்குவரத்து விதிகளில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் அரை ஹெல்மெட்டுகளுக்குத் (Half Helmets) தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான புதிய விதிமுறைகள் 2027 புத்தாண்டு முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக அம்மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்துள்ளார். இதற்கான சட்ட விதிகளை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரை ஹெல்மெட்டுகளுக்கு ஏன் தடை?

தற்போது பல இருசக்கர வாகன ஓட்டிகள் குறைந்த விலையில் கிடைக்கும் அரை ஹெல்மெட்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவை தலையின் மேற்பகுதியை மட்டுமே மூடுவதால், விபத்துகள் ஏற்படும்போது முகம், தாடை, காதுகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்குப் போதிய பாதுகாப்பு கிடைப்பதில்லை. இதனால் தலை மற்றும் முகப் பகுதியில் ஏற்படும் கடுமையான காயங்களைக் குறைக்கும் நோக்கில், முழு முகத்தையும் பாதுகாக்கும் Full-face Helmet அணிவதை அரசு கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விதிமுறை வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையாளர்களுக்கும் நடவடிக்கை!

அரை ஹெல்மெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதுடன், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகப் போக்குவரத்துத் துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் இணைந்து சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவையான சட்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட்ட பின்னர், மாநிலம் முழுவதும் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபாதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம்!

இதற்கிடையே, பாதசாரிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடைபாதைகளில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான அபராத நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி, முதல் முறை விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், இரண்டாவது முறை அதே தவறைச் செய்தால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் இதே குற்றத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளுக்கான அரசின் ஒப்புதல் மற்றும் நடைமுறைச் சட்டப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

வாகன ஓட்டிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

சாலை விபத்துகளைக் குறைப்பது, போக்குவரத்து விதிமீறல்களைத் தடுப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கர்நாடக அரசு இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ஹெல்மெட் அணிவதில் அலட்சியம் காட்டுபவர்கள் மற்றும் நடைபாதைகளை வாகனப் பயன்பாட்டிற்காகத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்த இந்தப் புதிய விதிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய விதிகளுக்கான இறுதி அரசாணை வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் தேதியைப் பொறுத்தே இவை நடைமுறைக்கு வரும்.

Exit mobile version