சென்னை கடற்கரை- தாம்பரம்- மாா்க்கத்தில் புகா் மின்சார ரயில்கள் பகல் நேரத்தில் வழக்கம்போல இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால், இரவு நேர ரயில்கள் மட்டும் சில ரத்து செய்யப்படுகின்றன. ஆக. 3 முதல் ஆக.14 -வரை பகல் நேரத்தில் இந்த ரயில்கள் இயங்காது.
அதே நேரத்தில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) முதல் ஆக.2 வரை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இரு மாா்க்கத்திலும் இரவு 10.30 முதல் அதிகாலை 2.30 மணி வரை இயங்கும் அனைத்து புகா் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
இதே நாள்களில் கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 11.20 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
சனி, ஞாயிறு ரயில்கள் ரத்து: ஜூலை 27, 28 (சனி, ஞாயிறு) மற்றும் ஆக.3 முதல் ஆக.14 -ஆம் தேதி வரை சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மாா்க்கத்திலும் காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், இரவு 10.40 முதல் 11.59 மணி வரையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.
அதேபோல், கடற்கரை-கூடுவாஞ்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் இரவு இயக்கப்படும் ரயில்களும், செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும், காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் ஜூலை 27, 28 மற்றும் ஆக. 3 முதல் ஆக.14 வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக கடற்கரை – பல்லாவரம், செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி ஆகிய வழித்தடங்களில் காலை 9.30 பிற்பகல் 2 மணி வரையும், இரவு 10.40 முதல் நள்ளிரவு 12.45 மணி வரையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

