திரையுலகில் குறிப்பிடத்தக்க பத்துக் கவிஞர்களில் மருதகாசி மிக மிக குறிப்பிடத்தக்கவர். கண்ணதாசன்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் மருதகாசி என்றால் மிகையல்ல. எழுதுகின்ற பாடலுக்குப் பொருள் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் கவிஞர்களில் எழுதுகின்ற பாடலிலும் பொருள் இருக்க வேண்டும் என்று எண்ணிய கவிஞர் இவர்.
திரைப்பாடல்களில் ஒரு வரியுடன் அடுத்த வரியை இணைக்கப் பயன்படும் ஒடிச்சொல் என்ற பதத்தை அருமையாக கையாண்டிருப்பார் கவிஞர் மருதகாசி. `திங்கள் உறங்கிய போதும் தென்றல் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா’ என்ற பாடலில் ஒடிச்சொல் பதத்தை கையாண்டிருப்பார் மருதகாசி. பாடலை எழுதியபோது, அவருடைய இளையமகன் மருதபரணி, திங்களும் தென்றலும் உறங்கும்போது கண்கள் உறங்காமலா இருக்கின்றன என கேட்டதால், `காதல்’ என்னும் ஒடிச்சொல்லை, ஓசையில் பொருத்தி, `கண்கள் உறங்கிடுமா, காதல் கண்கள் உறங்கிடுமா’ என எழுதினார் மருதகாசி..
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த டி.ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி நடித்த மாயாவதி என்ற படத்திற்குத்தான் ஜி.ராமநாதன் இசையில் முதன்முதல் பாடல் எழுதி திரைப்படப் பாடலாசிரியராக மருதகாசி அறிமுகம் ஆனார். 1949-ல் வெளிவந்த மாயாவதி படத்திலிருந்து 1983-ல் வெளிவந்த “தூங்காத கண்ணின்று ஒன்று” என்ற படம் வரை மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் மருதகாசி.
மந்திரி குமாரி படத்தில் இவர் எழுதிய “வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை” என்ற பாடல். “உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சல் ஆடுதே” என்ற பாடல் இவையிரண்டும் நம் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள். வாராய் நீ வாராய் என்ற பாடலில் மாதுரிதேவியை எஸ்.ஏ.நடராஜன் கொல்லப்போகிறார் என்பதை மறைமுகமான வார்த்தைகளில் மருதகாசி எழுதியிருப்பார். “புலியெனைத் தொடர்ந்து புதுமான் நீயே வாராய்” என்று அந்தப் பாட்டு முடியும்.
இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் இந்த பாடலின் அருமை புரியும். அதைப்போல “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலில் “உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே“ என்று மாதுரிதேவி பாட, “இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே” என்று எஸ்.ஏ.நடராஜன் பாடுவார்.
“குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ”என்று அந்தப் பெண்பாட “உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே” என்று இவர் முடிப்பார். இந்தப் பாடலின் கற்பனை வளத்தை அன்று பாராட்டாதவர்களே இல்லை. மருதகாசி திரையுலகில் நுழைந்த காலத்தில்தான் கண்ணதாசனும் நுழைந்தார். விரைவாக மெட்டுக்குப் பாட்டெழுதக் கூடியவர் அந்தக் காலத்தில் மருதகாசி என்பதால் பல படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதக் கூடிய வாய்ப்பு மருதகாசிக்குக் கிடைத்தது.
கண்ணதாசன் கதைவசனம் எழுதிய படங்களில் “மன்னாதி மன்னன்” என்ற படமும் ஒன்று. அதில் நாட்டியப் பேரொளி பத்மினி ஆடுகிற காட்சிக்கு கண்ணதாசன் எழுதிய பாடல் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான எம்.நடேசனுக்கும் மனநிறைவைத் தரவில்லை. அதனால் கண்ணதாசன் அனுமதியோடும், எம்.ஜி.ஆரின் அனுமதியோடும் மருதகாசியை அழைத்துப் பாடல் எழுத வைத்தார்.
அப்படி மருதகாசி எழுதிய பாடல்தான் “ஆடாத மனமும் உண்டோ”என்ற பாடல். அதே படத்தில் “ஆடும் மயிலே அழகு நிலாவே வாடா மலரே வருக” என்ற பாடலையும் மருதகாசிதான் எழுதினார். மருதகாசி கொடிகட்டிப் பறந்த காலம் அது. வாலி எழுதிய சில பாடல்களைக் கண்ணதாசன் எழுதியது என்று தவறாகச் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதைப்போல், மருதகாசி எழுதிய பாடல்களைக் கண்ணதாசன் எழுதியது என்றும், கல்யாணசுந்தரம் எழுதியது என்றும் சிலர் இன்றைக்கும் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பட்டுக்கோட்டையின் முதல் பாடல் தொகுதியில் மருதகாசியின் சில பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
Also Read – தூக்கத்தை வரவழைக்கும் பழக்கங்கள் இயற்கை, சமூகம், தத்துவம், காதல், தாலாட்டு, பக்தி என்று எதைப்பற்றி எழுதினாலும், அதில் தனி முத்திரை பதித்தவர் மருதகாசி. மங்கையர்திலகம் படத்தில் “நீலவண்ண கண்ணாவாடா நீ ஒரு முத்தம் தாடா” என்ற மருதகாசியின் பாடலை யாராவது மறக்க முடியுமா?
“முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே” என்று உத்தமபுத்திரன் படத்தில் இவர் எழுதிய பாடல் இன்னும் நம் நெஞ்சில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை (பிள்ளைக்கனியமுது). கடவுள் என்னும் முதலாளி (விவசாயி). வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே(மல்லிகா). காவியமா? நெஞ்சில் ஓவியமா? (பாவைவிளக்கு). சத்தியமே லட்சியமாய் கொள்ளடா(நீலமலைத்திருடன்). மனுஷனை மனுஷன் சாப்பிடுராண்டா தம்பிப் பயலே(தாய்க்குப்பின்தாரம்). மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏறுபூட்டி(மக்களைப்பெற்ற மகராசி). எடுத்துக் காட்டுக்கு ஒன்றிரண்டைச் சொல்கிறேனே தவிர சொல்வதற்கு நிறைய இருக்கின்றன.

