பழம்பெரும் நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணரல் காரணமாக இன்று காலை காலமானார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த நடிகர் ராஜேஷுக்கு வயது 75.
1949ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி மன்னார்குடியில் பிறந்த ராஜேஷ் வில்லியம்ஸ், கே. பாலசந்தர் இயக்கத்தில் 1974ம் ஆண்டு வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்த ராஜேஷுக்கு 1979ம் ஆண்டு வெளியான கன்னி பருவத்திலே படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1983ம் ஆண்டு ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு திவ்யா என்கிற மகளும் தீபக் என்கிற மகனும் உள்ளனர். 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ராஜேஷின் மனைவி உயிரிழந்தார். அந்த 7 நாட்கள், சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் ராஜேஷ். அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அந்த 7 நாட்கள், பயணங்கள் முடிவதில்லை, மெட்டி, அனல் காற்று, தாய் வீடு என பல படங்களில் நடித்த இவர், குணசித்ர நடிகராகவும் அப்பா நடிகராகவும் மாறி அஜித் குமார், விஜய், விக்ரம் என பல நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். நேருக்கு நேர், தீனா, சிட்டிசன், ரமணா, ரெட், சாமி, ஆஞ்சநேயா, கோவில், ஆட்டோகிராஃப், ஜீ, சிவகாசி, திருப்பதி, மாஸ்டர், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராஜேஷ், கடைசியாக விஜய் சேதுபதி நடித்த இந்தி படமான மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
