பிரபல ஆன்லைன் பயணச் சீட்டு முன்பதிவு நிறுவனமான மேக்மைட்ரிப் (MakeMyTrip), ஹோட்டல்களில் தங்குவோரின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், கூடுதல் கட்டணத்துடன் ‘முன்கூட்டியே செக்-இன்’ (Early Check-In) மற்றும் ‘தாமதமாக செக்-அவுட்’ (Late Check-Out) செய்யும் புதிய வசதியைத் தனது செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேக்மைட்ரிப் நிறுவனத்தின் தரவுகளின்படி, உள்நாட்டுப் பயணிகளில் 53 சதவீதம் பேர் காலை 9 மணிக்கு முன்பே தங்களின் இலக்குகளை அடைகின்றனர்; அதேபோல் 54 சதவீதம் பேர் மாலை 3 மணிக்குத் பிறகே தங்களின் பயணத்தைத் தொடங்குகின்றனர். இதனால், ஹோட்டல்களின் வழக்கமான செக்-இன் நேரத்திற்காகப் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் பயணிகள் தங்களின் தேவைக்கேற்ப 3 மணி நேரம், 6 மணி நேரம் அல்லது 9 மணி நேரத்திற்கான கூடுதல் நேர சிலாட்டுகளை (Slots) ஹோட்டல் புக் செய்யும் போதே முன்கூட்டியே கட்டணம் செலுத்தி உறுதி செய்து கொள்ள முடியும். இந்தியாவின் முதல் முறையாக இவ்வளவு பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, தற்போதைக்கு இந்தியாவில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், வில்லாக்கள், ஹோம்ஸ்டேக்கள் மற்றும் துபாய், பாங்காக், பாலி உள்ளிட்ட உலகின் முக்கிய 20 சர்வதேச நகரங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தங்குமிடங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.