Sunday, March 22, 2026
HomeUncategorizedமொழிப்போர் தியாகிகள் தினம் இன்று...!

மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று…!

மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர்.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 1938-ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நடராசன், உடல்குன்றி சென்னை சிறையில் உயிரிழந்தார். மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி அவர்தான். அதைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும்செ ன்னை சிறையில் உயிர் நீத்தார்.

நடராசன், தாளமுத்துவின் உயிரிழப்பை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததால், இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணை 1940-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், 1965-ல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அறிவிப்பால், மீண்டும் போராட்டம் உருவானது. அண்ணா தலைமையில் தி.மு.க.வின் போராட்டம் உக்கிரமானது. இதில், தீக்குளித்தும், குண்டடிப்பட்டும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் உயிரைவிட்டனர்.

போராட்டத்தால் நெருக்கடி அதிகரிக்கவே, வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் அரசு வந்தது. இதனால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் தாக்கத்தால், 1967-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சியமைக்கவும், ஆட்சிக் கட்டிலுக்கு வெகு தூரத்தில் காங்கிரஸ் இருப்பதற்கும் இந்தி எதிர்ப்பு அடித்தளம் இட்டது என்றால் மிகையல்ல.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments