மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம் இன்று!

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள் 19 ஜூன் என்று அவர் குடும்பமும் 24 ஜூன் என்று வெளித்தகவலும் ( யாரோ ஒருவர் கண்ணதாசனுக்கும் இவருக்கும் ஒரே பிறந்தநாளாய் முடிவு செய்திருப்பார் போலும்) சொல்கிறது..
எந்நாளாக இருந்தால் என்ன ..இசை மேதைக்கு ஒரு வணக்கம் சொல்லி விடுவோமா? இந்த பாட்டு என்பது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசந்தம். ராஜவீதிகளில் வலம்வரும் தேவதைகளின் தெவிட்டாத ஊர்வலம்.
உடற்கூட்டுக்குள் சிறகடிக்கும் உயிர்ப் பறவை. சிட்டுக்குருவியைப் போல துன்பங்களிலிருந்து விட்டு விடுதலையாகும் சுக அனுபவம். தாயின் கருவறையிலிருந்து, புது உலகுக்குப் புறப்படும் குழந்தையின் முதல் அழுகை. பாப்பா பாட்டு, கண்மூட தாலாட்டு. கண்விழிக்க திருப்பள்ளி எழுச்சி. இங்கு எல்லாவற்றுக்குமே பாட்டுதான்.
அதைக் கேட்டுத்தான் ரத்த நாளங்களில் வாடகை ஏதுமில்லாமல் ரசிப்புத்தன்மை குடியேறிவிடுகிறது. தமிழ் சினிமா, பாட்டுகளால் வளர்ந்தது, வளமானது, செவிக்கு நலமானது. பாட்டுகள் இல்லாத தமிழ் சினிமாவை எள்ளளவு கூட கற்பனை செய்து பார்க்க முடியாது.
தமிழ் சினிமாவின் இசை வரலாறு எம்.கே.டி., பி.யு. சின்னப்பா, சுப்பராமன், ஜி.ராமநாதன், டி.ஜி. லிங்கப்பா, சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல மேதைகளால் எழுதப்பட்டாலும், கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில், அந்த இசை வரலாற்றின் ஒரு பெயரை உச்சரிக்கும்போதே, உணர்வுகளை சிலிர்க்க வைத்தது. நாடி நரம்புகளை களி நடனம் புரியவைத்தது.
இசை என்றால் இவ்வளவு இனிமையாக இருக்குமா? என புது விளக்கம் ஒன்றை, உரையாக எழுதியது. அந்த இசை வரலாற்றின் இனிப்பான பெயர்தான் "எம்.எஸ்.வி". மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற நீண்ட இசையின், மென்மைகூட்டிய சுருக்கமான மெல்லிசைதான் எம்.எஸ்.வி. தென்றலின் கைபிடித்து, நந்தவனத்துக்குள் நடந்து சென்று, மலர்களை மார்போடு தழுவி, பச்சை சட்டை போட்டுக்கொண்ட இலைகளோடு இழைந்து இயற்கையின் எழிலை ரசிப்பது எவ்வளவு சுகம். அந்த சுக அனுபவத்தை தந்தது எம்.எஸ்.வியின் பல பாடல்கள்.எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினி, கமல் என எத்தனையோ கதாநாயகர்களின் படங்களுக்கு எழுதப்பட்டிருந்த வெற்றியின் முகவரியில், எம்.எஸ்.வி.யின் பெயர் பிரதான இடம் பெற்றிருந்தது.
சந்தம் பெரிதா? பாடல் பெரிதா? எல்லாம் சந்தங்களுக்கும் பாடல் எழுத முடியுமா? மெல்லிசை மன்னருக்கும், திரையுலகல் கம்பன் கண்ணதாசனுக்கும் ஒரு போட்டி. ஆனால் இந்தப், போட்டியில் உண்மையான வெற்றி ரசிகர்களுக்குத்தான். அந்தப் பாடல்தான் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் வரும் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' என்ற பாடல்.
தமிழ் சினிமா இசை வரலாற்றில், அமர்க்களமான அத்தியாயமாகத் திகழ்ந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் சினிமா இசையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கலந்திருக்கும் எம்.எஸ்.வி. என்ற இசைத்தொகுப்பு, 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி, இயற்கையின் விதிப்படி இயற்கை எய்தியது.
ஆனால், அந்த இசைத்தொகுப்பு ஏதோ ஒரு வடிவில் ராகமாய், தாளமாய், லயமாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். காற்றில்லாத உலகைக் கற்பனை செய்து காண இயலுமா? எம்.எஸ்.வியின் பாட்டு இல்லாத பொழுதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? இன்று அவரை நினைலில் கொள்வோம்.