உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நில உலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
என்னும் வரிகள் தன் சிந்தையுள் நிறைந்திருக்கும் சிவனைப் பற்றி
சேக்கிழார் பெருமான் உள்ளம் சிலிர்த்துப் பாடியவை.
இதில் உலகெலாம் உணர்ந்து என்றால்… ஈரேழு பதினான்கு உலகங்கள் என்று நாம் பொருள் கொள்கிறோம். ஆனால், இவ்வுலகத்தின் அனைத்து உயிரினங்களும் நமக்கு ஆதார நாயகனாக விளங்கும் சிவபெருமானின் பெருமைகளை உணர்ந்து, அவனைப் பணிந்தேத்துவதற்கு அரிதினும் அரிதானவன் என்று பொருள் கொள்ளலாம்.
இப்படி ஒரு உயிரினம், அதிலும் பறவையினத்தைச் சேர்ந்த ஒரு நாரை சிவனின் பெருமைகளைப் போற்றியதால், சிவபெருமான் அந்த நாரைக்கும் நற்கதி வழங்கிய நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. ஒரு அழகிய கிராமம். அங்கு தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய குளம். அந்த குளக்கரையில் பெரியப் பெரிய மரங்கள். அந்த மரங்களில் ஒன்றில் பறவையினத்தைச் சேர்ந்த ஒரு நாரை வசித்து வந்தது.
அமைதியான சூழல் – பாதுகாப்பான இருப்பிடம் – குளம் முழுக்க மீன்கள் – அதனால் இரைக்குப் பஞ்சமில்லை. தன் வளமான வாழ்க்கையை எண்ணி சற்று பெருமையுடனே இருந்தது நாரை. அதனுடைய தற்பெருமை காரணமோ… அல்லது யார் கண்ணும் பட்டுவிட்ட காரணமோ…
மழை பொழியவில்லை
குளத்தின் நீர்வற்றத்தொடங்கியது. அதனால் மீன்கள் கிடைப்பது அரிதானது. இறுதியில் வெறும் கட்டாந்தரைதான் கண்ணுக்குத் தெரிந்தது.
வாழ்வதற்கு வேறு வழியின்றி அடர்ந்த வனப்பகுதி நோக்கி நாரை பறந்து சென்றது.
புதிதாக வந்த இடம் அருமை. அங்கும் ஒரு குளம். ஆனால், நான்கு புறங்களிலும் படித்துறைகளிருந்தன. அதனையொட்டி ஒரு ஆசிரமம். அங்கு சத்யன் என்கிற பெயரில் ஒரு தலைமை முனிவர். அவருடன் இன்னும் பல முனிவர்கள்.
புதிய இடம் நாரைக்கு பூரிப்பு தந்தது.
அன்றிரவு அங்கு ஒரு மரத்தில் இடம் பிடித்து தங்கியது. விடிந்தும் விடியாத விடிகாலை வேளை. முனிவர்கள் குளிக்கத் தொடங்கினர். குளத்தின் மீன்கள் அவர்கள் மீது அச்சமின்றி தாவித் தாவி விளையடின.
இதைக்கண்ட நாரை ஆச்சரியப்பட்டது. இதுவரை மீனினத்தை தன் இரையாக மட்டுமே எண்ணிக்கொண்டிருந்த நாரையின் பார்வையில் கனிவு கசிந்தது. உள்ளத்தில் கருணை சுரந்தது.
சிறிது நேரத்தில் தலைமை முனிவர் சத்யன் மற்ற முனிவர்களிடம் பேசதொடங்கினார். அவரது பேச்சில், பிறப்பின் பெருமை பற்றியும், அவற்றை பேணிக்காக்கும் சிவபெருமானின் மேன்மைகளைப் பற்றியும் குறிப்பிட்டார்.
அதிலும் கடம்பவனம் என்றழைக்கப்பட்ட, மதுரையில் சொக்கநாத பெருமானாக மீனாட்சியின் கரம்பற்றிய சிவபெருமானையும், அத்தலத்தின் பெருமைகளையும், புகழ்ந்து பேசினார்.
அவர் பேசுவதைக்கேட்க கேட்க, நாரை தன்னையே மறந்தது. தவநிலைக்கே சென்றது. இத்தகைய அரிய வாய்ப்பிற்காகத்தான் இறைவன் தன்னை இங்கே வரவழைத்தானோ? என்றெல்லாம் வியந்தது.
அதன் மனதில் பிற உயிர்களைப்பற்றிய உன்னத சிந்தனை தோன்றியதால், தான் “இனி மீன்களை உண்பதில்லை” என்னும் முடிவிற்கு வந்தது.
அத்துடன் நில்லாது, உடனே புனித நிலமான மதுரையை நோக்கிப் பறந்தது.
ஒருவழியாக மதுரை மீனாட்சி அம்மை தலத்தின் கோபுரத்தை மூன்றுமுறை சுற்றி தரிசனம் செய்தபடி வந்து, பொற்றாமரை குளக்கரையில் வந்திறங்கியது.
இறைச்சிந்தனையால் விளைந்த இளகிய பண்பினால் இரைச் சிந்தனை வரவேயில்லை. அதனால் நாரை சாப்பிடவேயில்லை.
காலை மாலை தரிசனம் செய்வது, அடியவர்கள் சிவனைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதைக் கேட்பது, அப்படியே பொற்றாமரை குளக்கரையில் தவநிலையில் இருப்பது என்பதே நாரையின் அன்றாட வழக்கமானது.

