Skip to main content

வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா.. இன்று கோலாகல துவக்கம்!

வடபழனி முருகப் பெருமான் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா, 22ம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது.  

சென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழனி முருகப் பெருமான் கோவில் விளங்குகிறது. இத்தலம் சாதுக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முருகப்பெருமான் பாத ரட்சையுடன் அருள்பாலிக்கிறார். பழனிக்கு செல்ல முடியாத பக்தர்கள், இங்கு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
அங்காரகனுக்கு தனி சன்னதி இங்கு உள்ளதால், செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிபாட்டு, பரிகார தலமாகவும் விளங்குகிறது.
வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா, 22ம் தேதி முதல், அக்.,1ம் தேதி  வரை, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் பிரம்மாண்ட கொலு வைக்கப்படுகிறது.
நவராத்திரி பத்து நாளில் தினமும் காலை 11:00 மணி முதல் 11:30 மணிவரை மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை அம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படும்.
தினமும் மாலை, 5:00 மணி முதல் 7:00 மணிவரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு    நடத்தப்படுகிறது.
வரும், 28ம் தேதி மாலை 6:00 மணி முதல் 7:00 மணிவரை சிறப்பு திருமுறை பாராயணம் , அடுத்த நாள் மாலை 4:15 மணிக்கு மகளிரின் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.
வரும், 22ம் தேதி முதல் அக்.,1ம் தேதி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இரவு 7:00 மணிக்கு நாசங்கீர்த்தனம், இசைகச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்படுகிறது.
ஏக தின லட்சார்ச்சனை
நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு, 26ம் தேதி காலை 7:30 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணிவரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர் கோவில் அலுவலகத்தில், 250 கட்டணம் செலுத்தி ரசித பெற்றுக் கொள்ளலாம்.
வித்யாரம்பம் நிகழ்ச்சி
நவராத்திரியின் நிறைவு பகுதியாக அக்.,2ம் தேதி, ‘வித்யாரம்பம்’எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை  வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை துவக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.
கொலு பார்வை நேரம்
வடபழனி முருகன் கோவில் கொலுவை காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணிவரை, மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணிவரை பார்வையிடலாம். கொலுவில் உற்சவருக்கு தினமும் அந்நதந்த நாளுக்கு உரிய சிறப்பு அலங்காரம் செய்யப்படும். 
நவராத்திரி விழா நடக்கும் பத்து நாளும், பக்தர்கள் வருகை தந்து, சிறப்பு பூஜை, நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். கண்காட்சி நேரத்தில் ஆன்மிக வினாடி வினா நடத்தப்படும் அதில் பங்கேற்பவர்களுக்க பரிசுகள் வழங்கப்படும்.