Thursday, February 5, 2026
HomeUncategorizedதன் சிலைக்கு தானே எதிர்ப்பு!- கர்மவீரர் காமராஜர் - சிறப்பு கட்டுரை!

தன் சிலைக்கு தானே எதிர்ப்பு!- கர்மவீரர் காமராஜர் – சிறப்பு கட்டுரை!

உலகில் புகழ்ச்சியை விரும்பாதவர்கள், பிரபலமாவதை விரும்பாதவர்கள் எவருமே இன்றைக்கு இல்லை என்கிற நிலை வந்துவிட்டது! ஆனால், ”மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று தன் வாழ்நாளை தேசத்திற்கு மட்டுமே அர்ப்பணித்தவர் காமராஜர். அவருடைய  அப்பழுக்கற்ற அரசியல் வாழ்விற்கு எத்தனையோ சம்பவங்கள் சொல்லப்படுவது உண்டு. அவர்றில் ஒன்றுதான் தமிழகத்தில் அவருக்காக வைக்கப்பட்ட முதல் சிலை!

அதிகாரத்தில், புகழின் உச்சியில் இருப்பவர்களுடைய மனதில் எப்போதும் ஒருவித மமதை குடிகொண்டிருப்பது இயல்பான ஒன்று. அதற்காக சட்டத்தையே  தன் இஷ்டப்படி வளைப்பதும் உண்டு. இந்த கோட்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடு கொண்டவர் காமராஜர்!

 இதோ அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி: 

தமிழக காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது, மத்தியில் ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில், காமராஜர் மீது அபிமானம் கொண்டவர்கள் சென்னையில் அவருடைய சிலையை நிர்மாணிக்க ஒன்றிணைந்தனர். காமராஜருக்குத் தெரிந்தால் அவர் உடன்படவே மாட்டார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்! அதனால் காதும் காதும் வைத்தாற்போல் மிக ரகசியமாக நடந்து கொண்டிருந்தன! ஆனால், எது எப்படியானாலும் மாநிலத்தை ஆளும் முதலவருக்குத் தெரியாமல், அதுவும் தலைநகரில் ஏதேனும் செய்ய முடியுமா? அதற்காக அவரது ஆதரவாளர்கள் ஒரு முடிவிற்கு வந்து டில்லி சென்றனர்.

அப்போதைய பிரதமர் நேருவை சந்தித்து நிலைமையை விளக்கி, சென்னையில் ஒரு முக்கிய சந்திப்பைக் குறிப்பிட்டு பிரதமரே காமராஜரின் சிலையைத் திறந்துவைக்க தேதி பெறப்பட்டது. அவ்வளவுதான். காரியங்கள் மளமளவென்று நடந்தன. 

இந்நிலையில், சிலைவைக்க அனுமதிகேட்கும் கோப்பு காமராஜரிடம் சென்றது. அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த காமராஜர், எதிர்பார்த்தது போலவே உடனே பிரதமரைத் தொடர்புகொண்டு நிகழ்ச்சியை ரத்துசெய்யும்படிக் கேட்டுக் கொண்டார். ஆனால்,”ஒரு மாமனிதருக்கு சிலைதிறக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதிலும் அதைத்திறந்து வைக்கும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் தேதி கொடுத்தது கொடுத்ததுதான். அதனால், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் விழாவிற்கு தயாராகுங்கள்” எனக் கண்டிப்புடன் கூறி விட்டார். 

நேர்வின் கண்டிப்பான பதிலால் வேறுவழியின்றி சமாதானம் ஆன காமராஜர் சிலை வைக்கப்பட இருக்கும் சாலைகள் சந்திப்பைப் பற்றி ஆய்வு செய்தார். அதன்பின் ”இந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி கிடையாது. எவனாவது ஒரு லாரிக்காரன் நடுராத்திரியில் சிலைமீது இடித்துவிடுவான். அதைவைத்து கலவரம் நடக்கும். இதெல்லாம் தேவையா? அதனால், வேறு இடத்தில் சிலையை வையுங்கள்” என்று அனுமதியும் வழங்கினார். 

ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் சிலை திறப்பு விழாநடைபெற்றது. காமராஜர் தன் தொலைநோக்குப் பார்வையால் அமைத்த அந்த சிலை இன்றும் கூட போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி சென்னை அண்ணாசாலை ராஜாஜி ஹாலின் நுழைவாயில் அருகே கம்பீரமாக காட்சியளிக்கிறது!

குக்கிராமங்களில் பொறுப்பில் இருக்கும் வார்டு மெம்பர்கள்கூட குறுநில மன்னர்கள் போல செயல்படும் இந்த காலத்தில் வாழும் நமக்கெல்லாம், தன்னிடம் பதவி, ஆட்சி அதிகாரம், கட்சி மேலிட செல்வாக்கு, மக்களின் ஏகோபித்த ஆதரவு இத்தனை இருந்தும் எதையும் துஷ்பிரயோகம் செய்யாத உண்மையான மக்கள் தொண்டன் காமராஜரின் அக்காலத்தைய அணுகுமுறை, ஆட்சித்திறன் ஆகிய அனைத்துமே “ராமராஜ்யம்”போன்றே தோன்றுகிறது. 

எத்தனையோ பேர் அவரை வசைபாடியிருந்தபோதும், பின்னாளில் அவருடைய மெய்யன்பர்களாகவே விளங்கினர். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவர் “கவியரசு கண்ணதாசன்” அவர்கள்! 

அதுநாள்வரை திராவிட சித்தாந்தத்தில் தோய்ந்து, ஏதேதோ முரண் கருத்துகளைப் பேசி வந்த கண்ணதாசன், தான் பிறந்த இந்துமத சித்தாந்தத்தில் தெளிவுபெற்று, அரசியலிலும் அநீதிகளுக்கு எதிராக கொடிபிடிக்க ஆசைப்பட்டார்! அப்போது அவர் தெரிவு செய்தது பெருந்தலைவர் காமராஜர் அவர்களைத்தான்! கண்ணதாசன் கவிஞராயிற்றே!.. 

அவர்தன் ஆசையை தூதுவிடும் நோக்கில் “பட்டினத்தில் பூதம்” திரைப்படத்தில் கதாநாயகி பலர் முன்னிலையில் தன் நாயகனை மனதில் வைத்துக்கொண்டு முருகக்கடவுளை வேண்டுவது போல் பாடுவார்.  ஒரு பாடலில் காம்ராஜரை முருகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து பின்வருமாறு பாடல் எழுதினார்!

“பெண் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…

என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…

பெண் : வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…” … என்று எழுதினார். (முருக கடவுளின் தாய் பார்வதியின் இன்னொரு பெயர் சிவகாமி!) மேலும் அந்த பாடலில், 

பெண் : நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ…

  நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ…

  நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ…

      நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ…

ஆண் : காலம் மாறினால் காதலும் மாறுமோ…

      காலம் மாறினால் காதலும் மாறுமோ…

பெண் : மாறாது மாறாது இறைவன் ஆணை…  

 ”நெஞ்சம் நெருங்கிவிட்டால் பேதங்களுக்கு இடமே இல்லை. எனது காதல் மாறாது. இது இறைவன் மீது சத்தியம்”என்றெல்லாம் எழுதியிருப்பார்!

இன்று 2025 ஜூலை 15. கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள். அவரை வணங்கி மகிழ்கிறேன்.

மு.பழனிவாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments