Wednesday, March 4, 2026
HomeUncategorizedபண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை: கூட்டுறவுத் துறை அறிவிப்பு

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை: கூட்டுறவுத் துறை அறிவிப்பு

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் ஏறி கொண்டே இருக்கிறது 

கடந்த இரண்டு, மூன்று தினங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் 180 வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில், பீப்பிள் மீடியா ரிசர்ச் டிரஸ்டு சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நேற்று (22-11-2021) விடுக்கப்பட்ட கோரிக்கையில், பசுமை பண்ணை அங்காடி கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று (நவம்பர்-23) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

 தக்காளி விலையை கட்டுப்படுத்தவும், தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பவர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

 அவரைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி விடுத்துள்ள அறிக்கையில்… 

 கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் குறிப்பாக வெளிச்சந்தையில் தற்போது ரூ. 110 முதல் ரூ130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யவும், இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாண்டு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ. 17.70 கோடி மதிப்பிலான 5290 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.”

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்துக்குள் விரைவான நடவடிக்கை எடுத்து பசுமை பண்ணை அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு எமது மனமாந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments