‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற உள்ளது.
மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் ஒரு வழியாக திரையரங்குகளில் மிளிர உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளனர்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்குது. சோழ மன்னர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வனில் நம்ம ஊர் நாயகர்களின் கதாபாத்திரங்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்காய்ங்க.
இந்த ஆவலுக்கு சிறு தீனி போடும் வகையில் இன்று மாலை வெளியாக உள்ளது பொன்னியின் செல்வனின் முன்னோட்டம். முன்னதாக இந்த படத்தில் இருந்து வெளியாகியிருந்த டீசர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
விக்ரம் மற்றும் கார்த்திக் தொடர்பான பாடல்களை படக்குழு வெளியிட்டு பிரமிக்க வைத்திருந்தது. அதோடு டீசர் வெளியீட்டு விழாவில் நாயகர்கள் பேசிய தமிழ் பண்பாடு குறித்த கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையே பெற்றிருந்தன.
இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் இம்மாதம் (செப்டம்பர் 30-ம் தேதி) திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்து பாடியுள்ளார்.
இப்படத்தின் பாடல் உரிமை மட்டும் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் தொடக்க அறிவிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்தாலும் 2022 செப்டம்பரில்தான் இப்படத்தின் முதலாம் பாகம் வெளியாகிறது.
ஆனால் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் 120 நாட்களில் நிறைவு செய்துள்ளார் மணிரத்னம்.
இன்று நடைபெற உள்ள நிகிழ்ச்சிக்காக பிரம்மாண்ட செட்டுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழுவுடன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சோழர் காலத்தில் பயன்படுத்திய பல இசை கருவிகளை பயன்படுத்தி உள்ளார்.
படக்குழுவினருடன் இணைந்து பல திரைப்பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை Tips official நிறுவனம் பெற்று இருந்த நிலையில் இசைவெளியீட்டு விழாவின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு மற்றும் திரைப்பட தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றியது.

