புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் “கம்பன் பெருவிழா” கடந்த 12/07/2024 அன்று முதல் தொடர்ந்து 9 நாள்கள் நடைபெற்றன.
21/07/2024 நாளான இன்று (10 ஆம் நாள்) நிறைவுநாள் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. தமிழக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு. எஸ்.ரகுபதி அவர்கள் தலைமையேற்றார்.
வரவேற்புரையை திரு.ரா.கருணாகரன் அவர்கள் வரவேற்க, மூத்த வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் முன்னிலை வகிக்க, முதற்பகுதி நிகழ்ச்சியாக “கவிதைக்கு ஒரு கம்பன் ” என்னும் பொருளில் திருமிகு. கம்பம் செல்வேந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கம்பாராமாயணத்தின் பாத்திரங்களுக்கான பெருவிழா இல்லை. அந்த காவியத்தைப் படைத்தவனான கம்பனுக்கான பெருவிழா” என்றும், கம்பன் காலத்தில்தான் தமிழ் வளர்ந்தது என்றும் புகழாரம் சூட்டினார். நிகழ்ச்சியின் முடிவில் தா.முரளிதரன் நன்றியுரை ஆற்றினார்.
இரண்டாம் பகுதியில் “கம்பனில் மிகுதியும் வெளிப்படுவது இராவணனின் மாட்சியா? வீழ்ச்சியா?” என்னும் தலைப்பில் “பட்டிமன்றம்” நடைபெற்றது. “மாட்சியே! ” என திருச்சிரப்பள்ளி முனைவர் இரா.மாது, நாகப்பட்டிணம் திருமதி. வேம்புலா ஆகியோரும், ” வீழ்ச்சியே! ” என திருச்சிராப்பள்ளி முனைவர்.ந.விஜயசுந்தரி, முனைவர். சா.நீலகண்டன் ஆகியோரும் வாதிட்டனர்.
நேர்த்தியான இந்நிகழ்ச்சியில் “சொல்வேந்தர்” திரு.சுகி.சிவம் அவர்கள் நடுவராக அங்கம் வகித்தார். இத்துடன் 2024 கம்பன் பெருவிழா நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன. அனைத்துநாள் நிகழ்ச்சிகளும் இதன் விளம்பர பங்குதாரர்களான மெட்ராஸ் மிக்ஸர் (MADRASMIXTURE.COM) யூ ட்யூபில் உடனுக்குடன் வெளியிடப்பட்டுள்ளன.
“இது மேலும் தொடரும் ” என அதன் நிர்வாகம் கூறியது. ” மெகா தொலைக்காட்சி”யிலும், இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிபரப்பப்பாகும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவானது பொன்விழா காண உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை “புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவர். திரு. எஸ். ராமச்சந்திரன்” அவர்கள் இப்பொழுதே தாங்கள் தொடங்கி விட்டதாக மேடையில் தெரிவித்தபோது,
கம்பனின் ரசிகர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களும் புதுகை மாவட்டத்தின் அனைத்துதரப்பினரும் ஆரவாரமாக வரவேற்றனர். இது குறித்து தங்களுக்குள் மிகுந்த மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

