Home உலகம் சீசெல்ஸில் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு!

சீசெல்ஸில் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு!

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகச் சீசெல்ஸ் (Seychelles) நாட்டுக்குச் சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள புகழ்பெற்ற அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்திற்கு இன்று நேரில் சென்று மனமுருகி வழிபாடு நடத்தினார்.

அந்நாட்டு அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினியின் (Dr Patrick Herminie) பிரத்யேக அழைப்பின் பேரில், சீசெல்ஸ் நாட்டின் 50-ஆவது சுதந்திர தினப் பொன்விழாக் கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் இறுதி நாளான இன்று விக்டோரியா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தமிழ் வழிபாட்டுத் தலத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்குக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவிலில் உலக நன்மைக்காகவும், இரு நாடுகளின் நட்புக்காகவும் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்ட பிரதமர், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். சீசெல்ஸ் நாட்டின் ஒரே இந்து ஆலயமான இந்த நவசக்தி விநாயகர் கோவில், இந்திய-சீசெல்ஸ் நாடுகளுக்கு இடையேயான பண்பாட்டு மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version