புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் “பொன் பெருவிழா ” நிகழ்ச்சிகள் 18-07-2025 அன்று மாலை மங்கல இசை மற்றும் மலர் வணக்கத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவரும், முத்துப்பட்டினம் “திருப்பணிச் செம்மல்” திரு. ச.ராமச்சந்திரன் அவர்கள் முதன்மையாளராகப் பங்கேற்றார்.
திரு.M.R.M முருகப்பன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
முத்துமீனாட்சி மருத்துவமனை நிறுவனர், டாக்டர்.க.பெரியசாமி அவர்கள் தலைமையேற்று நடத்திய நிகழ்ச்சிக்கு, கோவிலூர் மடாலயம் சீர் வளர் சீர்.நாராயணா தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்கள்.
புதுச்சேரி கம்பன் கழகச்செயலாளரும், புதுச்சேரி மேனாள் சபாநாயகருமான திரு. சிவக்கொழுந்து அவர்கள், கள்ளிப்பட்டி கம்பன் கழகத்தலைவர் க.கு.கோ.சு.காகுத் கார்த்திகேயன், இராமேஸ்வரம் கம்பன் கழகத்தலைவர் திரு.கி.முரளிதரன், மதுரை கம்பன் கழகத்தலைவர் திரு.சங்கர சீதாராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய “சாணக்யா டிவி” திரு.ரங்கராஜ் பாண்டே ,இராமாயணத்தில் சொல்லின் செல்வன் ஆஞ்சநேயரின் செய்தி வெளிப்படுத்திய பாங்கை நயமாக எடுத்துரைத்தார். பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் தானாக ஓய்வெடுக்க நினைத்தால்தான் உண்டு. ஏனெனில் அவர் பீஷ்மர் போன்றவர்” என்றும்,
இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டபோது, “பன்முகத்தன்மையில் ஒற்றுமை” என்று பதில் கூறிய திமுகவின் கனிமொழியின் திறமையைப் பாராட்டியும் பேசினார். மேலும் கம்பராமாயணத்தின் பல பாடல்களில் தற்போதைய அரசியல் நிலவரத்துடன் ஒப்பிட்டு, அரங்கத்தில் கூடியிருந்தோரை தன் வழக்கமான பேச்சுத்திறனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பத்து நாள்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இவ்விழாவின் முதல் நாளான இன்று நிகழ்ச்சி நிரலை புதுகை கம்பன் கழகச்செயலாளர் புதுகை.ச.பாரதி சிறப்புற தொகுத்து வழங்கினார்.
நிறைவாக புதுகை கம்பன் கழகத்தின் துணைப் பொருளாளர் திரு. கறு.ராமசாமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

