இந்தியாவின் தூய்மையான நகரம் என்று கருதப்படும், இந்தூர் விமான நிலையத்தில் பயணியை ஒரு எலி கடித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 31ஆம் தேதி மற்றும் கடந்த 1ம் தேதிகளில் பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்ததால் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகம் அந்த இரு குழந்தைகளும், பிறக்கும் போதே சில குறைபாடுகள் இருந்ததால் தான் பிரச்சனை ஏற்பட்டது என்று விளக்கம் அளித்திருந்தது. இந்த பரபரப்பு அடங்கும் முன்னதாகவே எலியால் மற்றொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தூர் தேவி அகல்யாபாய் விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட இருந்த விமானம் ஒன்றில் பயணிப்பதற்காக டிக்கெட் எடுத்திருந்த பயணி ஒருவர் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை அங்கு சுற்றித்திருந்த எலி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பயணிக்கு டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி விமான நிலைய இயக்குனர் விபிங்கந்த் செத் கூறுகையில்,” இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன”. என்று கூறியுள்ளார். இந்தியாவின் தூய்மையான நகரம் என்று போற்றப்படும் இந்தூரில், இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

