Thursday, February 5, 2026
HomeUncategorizedரவி மோகனுக்கு வந்த சோதனை! 'தமிழினப் படுகொலை' மறுக்கும் அமைச்சருடன் கைகோர்த்ததால் வலுக்கும் கண்டனம்!

ரவி மோகனுக்கு வந்த சோதனை! ‘தமிழினப் படுகொலை’ மறுக்கும் அமைச்சருடன் கைகோர்த்ததால் வலுக்கும் கண்டனம்!

கோலிவுட்டில் அண்மைக்காலமாக அமைதியாக இருந்த சர்ச்சைகள், இப்போது நடிகர் ஜெயம் ரவியைச் சுற்றிக் குமுற ஆரம்பித்துள்ளன. ‘தமிழினப் படுகொலை’யே நடக்கவில்லை என்று பகிரங்கமாக மறுத்து, அதுபற்றிப் பேசுபவர்களைச் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டும் இலங்கை வெளியுறவு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜிதா ஹேரத்துடன் ஜெயம் ரவி சந்திப்பு நடத்தியதுதான் இந்த அனலுக்குக் காரணம்.

என்ன, இது கோலிவுட் கிசுகிசுவா என்று நினைக்கிறீர்களா? இல்லை, இல்லை! இது தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் ஒரு ஆபத்தான அரசியல் நாடகம் என்கிறார்கள் பற்றாளர்கள்.

ஜெயம் ரவியாகிய ரவி மோகன் ஒரு சந்திப்பின் புகைப்படத்தைப் போட்டு, இலங்கையின் சினிமா டூரிஸத்தை மேம்படுத்துவது பற்றியும், தங்கள் கலாச்சாரத்தைப் பரப்பப் போவது பற்றியும் அமைச்சர் ஹேரத் பேசியதாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஹேரத்தும் தன் பங்குக்கு, “இந்த முயற்சிகள் இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்தி, எங்கள் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவித்து, வசீகரிக்கும் கதைகளையும் மின்சார அதிர்வுமிக்க நடிப்புகளையும் இலங்கையின் அடையாளமிக்க இடங்களுக்குக் கொண்டுவரும்,” என்று ஒரு போடு போட்டார்.

ஆனால், இந்தச் சந்திப்புதான் புயலைக் கிளப்பியுள்ளது. “இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை மறுக்கும் ஒரு ஆட்சியை, எண்ணற்ற தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு தேசத்தை, இவ்வளவு பிரபலமான ஒரு நடிகர் ஆதரிப்பது ஏமாற்றமளிக்கிறது,” என்று பிரிட்டனைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் மூர்த்தி வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்துள்ளார்.

 “குறிப்பாக, இனப்படுகொலையை மறுப்பதிலும், எங்கள் அன்பானவர்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதிலும் முக்கியப் பங்காற்றும் ஹேரத் போன்ற ஒருவருடன் கைகோர்ப்பது அதிர்ச்சியளிக்கிறது,” என்றும் அவர் கொதித்துள்ளார்.

Jayam Ravi

ஹேரத், இலங்கையின் தற்போதைய அதிபர் அனுர குமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றுபவர். இவர் தமிழர்கள் மீதான கொடூரங்களுக்குப் பொறுப்பேற்பது குறித்துத் தொடர்ந்து ஒரு கடுமையான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். அண்மைக் கிழமைகளில்கூட, ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின்போது நடந்த தமிழர்களின் படுகொலையை “இனப்படுகொலை” என்று விவரிப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியிருக்கிறார். இந்தப் பேச்சு, சர்வதேச நீதி கோரி நீண்டகாலமாகப் போராடி வரும் தமிழர்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ரவி மோகனின் இந்தச் சந்திப்பு, இலங்கையின் கலாச்சாரப் பங்களிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்ச்சியான அழைப்புகளுக்கு மத்தியில் நடந்திருப்பதுதான் பலரின் நெற்றிக்கண்ணைத் திறந்துள்ளது. இலங்கை இன்னும் heavily militarised ஆகவும், தமிழர்களின் நீதி கோரிக்கைகள் தீர்க்கப்படாமலும் இருக்கும் நிலையில், இப்படி ஒரு நடிகர் கைகோர்ப்பது, இலங்கையின் சர்வதேச இமேஜை ‘வெள்ளையடிக்கும்’ முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.

இலங்கை அரசு, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், தங்களை ஒரு கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாக மாற்ற முயற்சிக்கும் அதேவேளை, தமிழர்களின் குரலைத் தொடர்ந்து நசுக்கி வருகிறது. 2009-ல் ஆயுத மோதல் அதிகாரப்பூர்வமாக முடிந்தாலும், இலங்கைப் படைகள் இன்னும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளன. தமிழ்ச் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு, தொல்லைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவலுக்கு உள்ளாகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக ரவி மோகன்  ஒரு நற்பெயரைக் கொண்டிருந்தாலும், இத்தகைய ஒரு சர்ச்சைக்குரிய அரசாங்கத்துடன் அவர் கைகோர்த்தது, அவரது ரசிகர்கள் மத்தியிலும், பொது பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கலைக்கு நாடு, மொழி இல்லைதான்… ஆனால், இனப்படுகொலையை மறுக்கும் ஒருவருடன் இணையும்போது, அதன் அரசியல் ரீதியான விளைவுகளையும், அது ஏற்படுத்தும் வலிகளையும் உணர்ந்திருக்க வேண்டாமா ஜெயம் ரவி? இந்தக் கண்டனக் குரல்கள் ஜெயம் ரவியை எங்கு கொண்டு செல்லும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments