இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் போதிலும் ரொக்கப் பணத்திற்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக பாலிமர் எனப்படும் ‘பிளாஸ்டிக்’ ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை (Pilot Project) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
பாட்னா மற்றும் மும்பையில் அண்மையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியக் கூட்டங்களில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக அதிக புழக்கத்தில் இருந்து மிக எளிதாக சேதமடையக்கூடிய 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் இந்த பிளாஸ்டிக் கரன்சி முறையைச் சோதனை முறையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய பருத்தி அடிப்படையிலான காகித நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு 6,372.8 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதும், ஓராண்டில் மட்டும் சுமார் 23.8 பில்லியன் அழுக்கடைந்த மற்றும் கிழிந்த நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற வேண்டிய சவால் ஏற்பட்டிருப்பதுமே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும்.
காகித நோட்டுகளை விட 4 மடங்கு அதிக ஆயுள் கொண்ட இந்த பாலிமர் நோட்டுகள், தண்ணீர், ஈரப்பதம் மற்றும் மடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தாக்குப்பிடிப்பதோடு, கள்ள நோட்டுகளை அச்சிட முடியாத அளவிற்கான அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால், நீண்ட கால அளவில் கரன்சி மேலாண்மைச் செலவை இது பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
