Monday, March 23, 2026
Homeகிளாசிக்பகுத்தறிவு மன்னன் நடிகர் மணிவண்ணன் பிறந்ததினம் இன்று!

பகுத்தறிவு மன்னன் நடிகர் மணிவண்ணன் பிறந்ததினம் இன்று!

தமிழ் சினிமாவின் சுவாரஸ்யமான படைப்பாளி, ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், நானூறுக்கும் அதிகமான படங்களில் நடித்தவர் – அவர்தான் மணிவண்ணன். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அசத்திய மணிவண்ணன் பிறந்த தினம் இன்று (ஜூலை 31, 2018).

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராகவும், கதை-வசன எழுத்தாளராகவும், நடிகராகவும் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை அவர் பிடித்துக்கொண்டார். ஒரு காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் மொத்தப் படங்களுக்கும், மணிவண்ணன் நடித்த படங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நடிகராக இத்தனை படங்களில் நடிப்பதே பெரிய விஷயம் என்றால், ஒரு இயக்குநராகவும் மணிவண்ணனின் வேகமும் உழைப்பும் வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தது!

அவர் நிறையப் படங்களை இயக்கியது மட்டுமல்லாமல், காதல், ஆக்‌ஷன், கிரைம், த்ரில்லர், குடும்ப உறவுகள், சமூகப் பிரச்சினைகள், அரசியல் எனப் பல வகைமைகளைச் சேர்ந்த படங்களை எழுதி இயக்கினார். இந்த ஒவ்வொரு வகைமையிலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

தான் இயக்கிய படங்களைப் போலவே, நடித்த படங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன் முற்போக்கு பார்வையையும், பகுத்தறிவு கொள்கைகளையும் வசனங்களாக வெளிப்படுத்த மணிவண்ணன் ஒருபோதும் தயங்கியதில்லை. அந்தக் கருத்துக்களைக் கதை, காட்சி, கதாபாத்திரம் ஆகியவற்றின் சட்டகத்துக்குள் மிக லாவகமாகப் பொருத்தும் அசாத்திய திறமை அவருக்கு இருந்தது.

ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் நேரம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருந்த மணிவண்ணன், அரசியல் இயக்கங்களிலும், அவை சார்ந்த செயல்பாடுகளிலும் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுவந்தார். கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு போன்ற பகுத்தறிவு, முற்போக்கு கருத்துக்களைப் பொதுவாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் கடைபிடித்தார். மார்க்ஸியம், பகுத்தறிவுவாதம், தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் சித்தாந்தங்களில் தீவிரப் பயிற்சியும், பற்றுதலும் கொண்டவராகக் கடைசி வரை இயங்கினார்.

2013 ஜூன் 15 அன்று உடல்நலக் குறைவால் மறைந்த மணிவண்ணன், அவர் எழுதிய, இயக்கிய திரைப்படங்கள், நடித்த கதாபாத்திரங்கள், இவற்றின் மூலம் தமிழ் மக்கள் மனதில் விதைத்த கருத்துகள், சிந்தனைகள் ஆகியவற்றின் மூலம் என்றென்றும் அழியாமல் வாழ்வார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments