Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்இந்திய தத்துவ மற்றும் ஆன்மீகவாதி "ஓஷோ" நினைவு நாளின்று!

இந்திய தத்துவ மற்றும் ஆன்மீகவாதி “ஓஷோ” நினைவு நாளின்று!

நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா அல்லது இது வெறும் அகங்காரமா? எது உன்னுடைய ‘ நான் ‘? எங்கே உன்னுடைய ‘ நான் ‘? உன்னுடைய ஆணவமா?அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும், அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த ‘ நானை ’ தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது ‘ நான் ‘ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது ‘ நான் ‘ அங்கிருக்காது.

எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான்.தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென், அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.

நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.

தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.

நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான்.

இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற
பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான்.

நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?”

“ஆம், அதுவேதான். இதுதான்”

“தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார்.

அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.

அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.

துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது.

“அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார்.

“அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.”

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது.

கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.

துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும்இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.

அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘?.நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார்,உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று,இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும்.

மேலும் நீங்கள் வாழ்வதற்கு உங்களுக்கு ஒரு மாளிகை கிடைக்கிறதா… அனுபவியுங்கள். இல்லையா… ஒரு குடிசையில் ஆனந்தமாயிருங்கள்’ என்கிறார் ஓஷோ. இந்த மனநிலை வாய்த்தால் நம்மைவிட மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எவரும் இருக்க முடியாது. ஓர் உதாரணக் கதையையும் இதற்காகச் சொல்கிறார்.ஒரு மனிதன் ஓரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து வந்தான். உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது போன்ற சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய்“ என்று கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது.

முடிவில் ஓரு நாள் அந்த மனிதன், “நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம் – எனக்கு ஏதாவது ஓர் அதிசயம் – ஒரே ஒரு அதிசயமாவது செய்ய கற்றுக் தர வேண்டும்” என்றான்.

அதற்கு அந்த வயதான குரு, “ஆனால் எனக்கு எந்த அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை தேவையின்றி வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்” என்று கூறினார்.

ஆனால் அந்த மனிதனோ, ”உங்களுக்கு அதிசயம் செய்யத் தெரியாது என்று எப்போதும் நீங்கள் மறுத்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எப்போதும் அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர் என்னிடம் கூறியுள்ளார்கள் – நீ அவர் கூறுவதைக் கேட்காதே. அவருக்கு சேவை செய்துகொண்டே வா. ஓருநாள் அவர் உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார். ஆனால் அதற்கு நீ ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான் கூறுவார் என்று கூறியுள்ளனர். ஓருவேளை நான் இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ என்னவோ” என்று கூறினான்.

சில நாட்கள் கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன் இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக் கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன் என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர். “ஒருவேளை அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே நடப்பவை. நான் அவற்றை செய்வதில்லை.”

உயர்ந்த தன்னுணர்வு நிலை அடைந்த மனிதர்களிடம், இப்படிப் பல விஷயங்கள் தானாகவே நடக்கும். எப்படி சூரியன் உதிக்கும்போது பறவைகள் பாடுகின்றனவோ அப்படித்தான். சூரியன் இந்த அதிசயத்தை செய்வதில்லை. மலர்கள் தங்கள் இதழ்களை தாமாகவே திறக்கின்றன. சூரியன் இந்த அதிசயத்தை புரிவதில்லை. சூரியன் இருந்தால் போதும், இந்த அதிசயங்கள் தாமே நடக்கும். இப்படி தன்னுணர்வு நிலையில் விழிப்பு பெற்ற ஓரு மனிதனின் இருப்பே பல மலர்கள் இதழ் மலரவும், பல பறவைகள் கானம் பாடவும் போதுமானதாக இருக்கும்.

அந்த வயதான குரு, “நான் உனக்கு ஏதாவது ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப் போகமாட்டாய் போலிருக்கிறதே” என்றார். அந்த மனிதன், “அது உண்மைதான்” என்றான். ஆகவே குரு “நான் உனக்கு ஓரு ரகசிய மந்திரம் கூறுகிறேன். ஓரு சிறு மந்திரம். திபெத்திய மந்திரம் “ஓம் மணி பத்மீ ஹம்” என்பதை எழுதித்தருகிறேன்” என்றார். ஓம் என்பது வாழ்விருப்பின் நிரந்தர ஓசை, மணி பத்மீ ஹம் என்றால் தாமரைப் பூவில் இருக்கும் வைரமணி. மணி என்றால் வைரம், பத்மம் என்றால் தாமரை. ஆக அதன் அர்த்தம் நிரந்தர ஓசையும், தாமரை பூவுக்குள் இருக்கும் வைரமும் என்பதாகும். இது முக்தி நிலை என்பதன் அர்த்தமாகும். எங்கும் பரந்து உள்ள நிரந்தர ஓசையும், தாமரையின் அழகும், மேலும் தாமரையின் உள்ளிருக்கும் வைரத்தின் ஓளியும். ஓரு சின்ன மந்திரத்திற்குள் அவர்கள் முக்தி அனுபவத்தின் முழுமையையும் சுருக்கி விவரித்துள்ளனர்.

அந்த வயதான குரு, “இந்த மந்திரத்தை எடுத்துச் சென்று, இதை ஐந்து முறை, வெறும் ஐந்தே ஐந்து முறை கூறு. முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கொள். கதவுகளை மூடிக்கொண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.

அந்த மனிதன் வேகமாக வெளியேறத் துவங்கினான். அவன் தன் நன்றி உணர்வைக் காட்டக்கூட முயலவில்லை. நன்றி என்று கூறக்கூட முயலவில்லை. உடனே கோயில் படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன் பாதிதூரம் போனபோது, அந்த குரு, “நில்! ஓன்றைக் கூற மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது ஒன்று நினைவிருக்கட்டும். குரங்கைப் பற்றி நினைக்கவே கூடாது!“ என்று சத்தமாகக் கூறினார்.

அந்த மனிதன், “நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான் நினைத்ததே இல்லை” என்றான். குரு, “சரிதான், ஆனால் நினைவிருக்கட்டும்! குரங்கு மட்டும் கூடவே கூடாது. குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை மந்திரம் கூற வேண்டும்” என்றார்.

அந்த மனிதன் “குரங்கு எதற்காக வரும்?” என்றான். குரு, “எனக்குத் தெரியாது. நான் உனக்கு இரகசியத்தைக் கூறிவிட்டேன். இதுதான் எனது குரு எனக்குக் கூறிய இரகசியமாகும்.” என்றார்.

ஆனால் அவன் படிகளில் இறங்கத் துவங்கும் முன்பே குரங்குகளைப் பற்றி நினைக்கத் துவங்கி விட்டான். அவன், “அடக் கடவுளே நான் இன்னும் மந்திரம் கூறக் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் குரங்குகள் வந்துவிட்டனவே!” என்று கூறினான். அவன் கண்களை மூடியபோதும் குரங்குகள். குரங்குகள் இளித்துக் கொண்டு, அவனைப் பார்த்து மூஞ்சியைக் காட்டின. அவன், “இது ஓரு விநோத மந்திரம்தான். நான் இன்னும் துவங்கவேயில்லை, அதற்குள்ளா?” என்றான்.

அவன் வீட்டைச் சென்றடைந்தபோது குரங்குகளால் சூழப்பட்டிருந்தான். அவன் எங்குப் பார்த்தாலும் குரங்கைத்தான் கண்டான். உள்ளே சென்று குளித்தான். ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை. குளியலறையில் மூடிய கதவிற்குப்பின் குரங்குகள் சுற்றி அமர்ந்திருந்தன. அவன், “அந்தக் கிழவன் ஓரு முட்டாள். இந்தக் குரங்குதான் பிரச்னை என்றால் அவன் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கவே கூடாது. யானைகள் வரவில்லை. ஓட்டகங்கள் வரவில்லை. சிங்கங்களும் வரவில்லை. குரங்கைக் தவிர வேறெதுவுமே வரவில்லை.” என்று நினைத்தான்.

பிறகு அவன் கால்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஆனால் அதற்கு எந்த பயனுமில்லை. குரங்குகள் அவனை இடித்தன. குரங்குகள் மடியில் உட்கார்ந்து கொண்டன. சுற்றிலும் ஓரே குரங்குக் கும்பல்தான். அவனுக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவன் மனைவி அவனை கடந்து சென்றபோது அவன் பார்த்தான். அப்போது அவளும் கூட ஓரு குரங்கு போல….. இல்லை, இல்லை, அவள் என் மனைவி. அவன் தந்தை கடந்து போனார். பார்த்தால் கிழக் குரங்குபோல…… சிலமுறை அவன் தந்தைபோலத் தெரிந்தார். அந்த மனிதன், “ஐயோ நான் பைத்தியமாகி விடுவேன்” என்று நினைத்துக் கொண்டான்.

ஐந்து தடவை என்பது மிக அதிகம். அந்த மந்திரமான ஓம் மணி பத்மீ ஹம் என்ற நான்கு வார்த்தைகளை ஓரு முறை கூட முடிக்கவிட வில்லை. அத்தனை குரங்குகள். அன்றிரவு முழுவதும் அவன் முயன்றான். நிறைய முறை குளித்தான். ஒருவேளை அவனது உடுப்புகள் போதுமான அளவு தூய்மையாக இல்லையோ என நினைத்துக் கொண்டு நடு இரவில், அந்த குளிர்காலத்தில் அவன் நிர்வாணமாக நின்றான். இப்போது அழுக்கு துணிகள் பற்றியோ, அல்லது வேறு எது பற்றியோ எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் குரங்குகளும் சுற்றிலும் காலை மடித்துகொண்டு பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றன. அவன் அவற்றைப் பார்த்துச் சப்தமிட்டான். அவை சிரித்தன.

காலையில் அவன் கிட்டதட்ட பைத்தியமாகிவிட்டான். “அந்த கிழவன் தந்திரக்காரன். எத்தனை வருடங்களாக நான் சேவை செய்தேன். முடிவில் அவன் எனக்கு இரகசியத்தையும் தந்து, கூடவே இந்தக் குரங்குகளையும் தந்து அந்த இரகசிய மந்திரத்தை நாசமாக்கி விட்டானே!” என்றான் அவன்.

அவன் அந்த குருவிடம் திரும்பிச் சென்று, அந்த மந்திரத்தை திருப்பி தந்துவிட்டு, “நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்தக் குரங்குகள்……” என்றான்.

அந்தக் குரு, “அவை உன்னிடம் வரவே வராது என்றாயே” என்றார். அவன், “நான் இதுவரை என் வாழ்வில் ஓரு குரங்கைப் பற்றிக்கூட எண்ணியதோ, கனவில் கண்டதோ நேரில் கூட கண்டதோ கிடையாது. இலட்சக்கணக்கான விலங்குகளைப் பற்றி நான் யோசித்ததேயில்லை, அவசியமுமில்லை. நீங்கள் அந்த வார்த்தையைக் கூறாமலிருந்திருந்தால் என்னால் அதிசயங்களை நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது இப்போது நடவாத காரியமாகி விட்டது.” என்றான்.

குரு. “நான் என்ன செய்வது? குரங்கு அந்த மந்திரத்துடன் இணைந்து வரும். குரங்கு இல்லையேல் அந்த மந்திரம் பயனில்லை. குரங்கைத் தவிர்க்கும் வழி தெரியாவிட்டால் உன்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.” என்றார்.

அந்த மனிதன், “நான் எல்லா அதிசயங்களை பற்றியும் மறந்தே போய்விட்டேன். இந்த மந்திரத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு என்னை குரங்குகளிடமிருந்து விடுவியுங்கள். ஏனெனில் எனக்கு மந்திரம் போனாலும் குரங்குகள் போகாதோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு மனைவியும் வயதான தகப்பனாரும், சிறு குழந்தைகளும் உள்ளனர். நான் அவர்களை கவனித்தாக வேண்டும். என்னால் இரவும் பகலும் அந்த குரங்குகளுடன் சண்டையிட முடியாது.” என்று வேண்டினான்.

குரு, “அந்த மந்திரத்தை நீ என்னிடம் திருப்பி தந்து விட்டதால் இனிமேல் குரங்குகள் வராது. அவை மிகவும் நேர்மையான பக்திமான்கள்.” என்றார்.

அந்த மனிதன் சென்று நாலாபக்கமும் பார்த்தபோது எங்குமே குரங்குகள் தென்படவில்லை. அவன் ஆச்சரியமடைந்தான். வீடு சென்று பார்த்தபோது மனைவி மனைவியாகவே தோற்றமளித்தாள். தகப்பனார் தகப்பனாராகவே தோன்றினார். குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தனர். அவன் இது விநோதம்தான் என்று குளித்தான். குளியலறை காலியாகவே இருந்தது! “அந்த மந்திரம் சிறியதுதான், குரு எழுதிக்கொடுத்த மந்திரத்தை நான் திருப்பித் தந்து விட்டாலும் கூட, அதை இரவு முழுவதும் கூறியபடியிருந்ததால் எனக்கு அது நினைவிருக்கிறது. இப்போது எந்த ஆபத்துமில்லை…. நான் கூறிப் பார்க்கிறேன்.” என்று நினைத்தான்.

அவன் ஓம் என்று துவங்கிய கணமே, ஓரு குரங்கு தோன்றிவிட்டது. கூடவே இரண்டு குரங்குகள் சுற்றி அமர்ந்து ஓம் என்றன. அந்த எண்ணம் முழுவதையும் கைவிட்டுவிட்டான். அவன் நான் கடைக்குப் போய் என் வேலையைப் பார்க்கிறேன். இந்த அதிசயங்களை நிகழ்த்தும் எண்ணம் இனிமேல் சரியாக வராது என்று போய்விட்டான்.

ஒரு இளைஞன் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் எனும் தீராத ஆவலால் தனது குடும்பம், தனது சுற்றம் எல்லோரையும் துறந்து தனக்கு ஒரு குருவைத் தேடி புறப்பட்டான். அப்படி அவன் தனது நகரத்தை விட்டு புறப்பட்டுச் செல்லும்போது ஒரு அறுபது வயது குறிப்பிடத்தக்க ஒருவர் ஒரு மரத்தடியில் மிகவும்
அமைதியாகவும், மிகவும் வசீகரத்தோடும் அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியவராகவும், மிகவும் காந்த சக்தியுடையவராகவும்
இருந்தார். அவனையறியாமலேயே தற்செயலாக அவன் அவரிடம் சென்று தான் ஒரு குருவைத் தேடி புறப்பட்டு இருப்பதை கூறினான். “நீங்கள் ஒரு மூதறிஞர், உங்களுடைய ஞானத்தைஎ ன்னால் உணர முடிகிறது. உங்களைச் சுற்றியுள்ள உயிர்துடிப்பை என்னால் உணர முடிகிறது. நான் எங்கே போவது? இவர்தான் என்னுடைய குரு என்பதை நான் எப்படி கண்டு பிடிப்பது? அதன் அறிகுறி என்ன? இங்கே பலகுருமார்கள் இருக்கின்றனர், ஆனால் யார்எனக்கு முடிவற்றதற்கு வழி காட்டக் கூடியவர் என்பதை நான் எப்படி உணர்ந்து கொள்வது? என்று எனக்கு கூற முடியுமா?” என்று கேட்டான்.

அந்த வயதானவன், “அது மிகவும் சுலபம்” என்று கூறிவிட்டு, “அந்த குரு எப்படி இருப்பார், அவரைச் சுற்றி எந்த விதமான சூழ்நிலை இருக்கும், அவருக்கு எவ்வளவு வயதிருக்கும்,” எனறெல்லாம் கூறிவிட்டு ‘அவர் எந்த மரத்தடியில் அமர்ந்திருப்பார்’ என்பதைக் கூட கூறினார்.

இளைஞன் அவருக்கு நன்றி கூறினான். அப்போது அவர், “நீ எனக்கு நன்றி கூறும் நேரம் இன்னும் வரவில்லை, நான் காத்திருக்கிறேன்” என்றார்.

“ஏன் அவர் இப்படி கூறுகிறார், எதற்காக அவர்காத்திருக்கிறேன் என்கிறார்” என்பது இளைஞனுக்கு புரியவில்லை.

சுமார் முப்பது வருடங்கள் அவன் குருவைத் தேடி காடு, மலை, வனம், வனாந்திரம், பாலைவனமெல்லாம் அலைந்தான். ஆனால் எல்லா விதத்திலும் பொருந்தக் கூடியவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வியடைந்தவனாய், விரக்தியுற்று, சோர்வாக அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் இப்போது இளைஞன்அல்ல. அவன் கிளம்பும்போது அவனுக்கு வயது முப்பது, இப்போது அவனுக்கு வயது அறுபது.

ஆனால் அவன் தன்னுடைய நகரத்தினுள் நுழையும் சமயம் அவன் அந்த வயதானவன் இன்னும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனால் தனது கண்களையே நம்ப முடிய வில்லை. “அடக் கடவுளே இவர்தானா அவர் குறிப்பிட்ட மனிதர்! – அவருக்கு 90 வயதிருக்கும் என்று கூட குறிப்பிட்டாரே……!மேலும் மரத்தைப் பற்றி கூட சொன்னார். அவர் அமர்ந்திருந்த மரம் என்ன என்பதைக் கூட பார்க்க முடியாத அளவு முழுமையாக தன்னுணர்வின்றி இருந்திருக்கின்றேனே. அவர்
குறிப்பிட்ட அந்த மணம் – அந்த பிரகாசம், அந்த இருப்பு, அவரைச்சுற்றியுள்ள அந்த உயிர் துடிப்பு………”

அவன் அவர் காலடியில் விழுந்தான். “என்ன விதமான வேடிக்கை இது,! முப்பது வருடங்களாக நான் பாலைவனத்திலும், மலைகளிலும் தேடி அலைந்தேன். இது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படி என்னை தேடி அலையவிட்டு விட்டீர்களே” என்று கேட்டான்.

அவர் கூறினார், “எனக்கு தெரிந்திருப்பது ஒரு பொருட்டே அல்ல.உன்னால் தெரிந்துகொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்வி. நான் முழுமையாக தெளிவாக
விளக்கிக் கூறினேன். ஆனால் நீ இந்த முப்பது வருடங்கள் தேடி திரிய வேண்டும். இந்த முப்பது வருடங்கள் அலைச்சலுக்குப் பிறகுதான் உனக்கு ஒரு சிறிதளவு கவனம்
வந்திருக்கிறது. அன்று நீ எனக்கு நன்றி கூறியபோது, நான் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை, ஒருநாள் அந்த நேரம் வரும் எனக் கூறினேன் அல்லவா?

நீ உன்னுடைய முப்பது வருடங்கள் தேடி அலைந்ததைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறாய், ஆனால் நான் இங்கே முப்பது வருடங்களாக உனக்காக உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய சொந்த வேலை எப்போதோ முடிந்து விட்டது.என்னுடைய படகு வந்து எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒத்திப் போட்டு ஒத்திப்போட்டுகொண்டே வந்திருக்கிறேன். முட்டாளே முப்பது வருடங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாயே! – நான் மரத்தைப் பற்றிக்கூட விவரித்தேனே,என்னுடைய ஒவ்வொன்றையும் பற்றியும் விவரமாக கூறினேனே – என்னுடைய மூக்கு, என்னுடைய தாடி, என்னுடைய கண்கள்!. நான் விரிவாக விளக்கமாக எல்லாவற்றையும் கூறினேன். நீ என்னைத் தேடி அவசரமாக ஓடினாய். ஆனால் இன்னும் தாமதமாகி விடவில்லை. நான் இறந்து போய்விட்டால் எனது வார்த்தை, எனது வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போய்விடுமே என்றுஅஞ்சினேன். கூடிய விரைவில் இந்த முட்டாள் வந்துவிடுவான், ஆனால் நான் இங்கே இல்லையென்றால் எனது வர்ணனை, என்னைப்பற்றிய எனது குறிப்பு, எல்லாமே வீணாகிப் போய்விடுமே, எல்லாம் பொய்யென்று ஆகிவிடுமே என்று கவலைப்பட்டேன். அதை நிரூபிப்பதற்காக, நான் இந்த மரத்தடியில் முப்பது வருடங்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னை அன்றே தேர்ந்தெடுத்துவிட்டாய், ஆனால் நீ அதை உணர முடியாது, உனக்கு அந்த கண்கள் அன்று இல்லை. நீ என் வார்த்தைகளை கேட்டாய், ஆனால் அதன் பொருளை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன் முன்னால் இருந்தேன்,என்னை நானே விவரித்துக் கூறினேன், ஆனால் நீ என்னை எங்கோ தேடும் எண்ணத்தில்இருந்தாய்” என்று கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments