நியூயார்க்கிலிருந்து 1937 அக்டோபர் 2-ல் டப்ளின் நகருக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த சமாரியா கப்பலில் 26 வயதுகூட நிரம்பாத ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் – காந்தியின் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகைச் சுற்றினார். கப்பலிலும் விமானத்திலும் ரயிலிலும் ஒரு லட்சம் மைல் பயணித்தார். 30 ஆண்டுகளில், 100 கேமராகாரர்கள் படம் பிடித்த 50,000 அடி நீளப் படச் சுருள்களைக் கண்டெடுத்தார். 1940-ல் ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்ற இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படம் ஆகஸ்ட் 1940-ல் வெளிவந்தது.
காந்தியைப் பற்றிய முதல் முழு நீளப் படம் என்ற பெருமை இதற்கு உண்டு. தமிழ் வடிவம் வெளிவந்த சில மாதங்களில், அப்படம் தெலுங்கு விவரணையுடன் வெளி வந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் சூடுபிடித்த வேளையில், சில ஆண்டுகள் அதன் படச்சுருள்கள் தலைமறைவாயின. சுதந்திரக் கொண்டாட்டம் கோலாகலமாக அரங்கேறிக்கொண்டிருந்த வேளையில், 14 ஆகஸ்ட் 1947 இரவு புது டெல்லியில் இப்படம் திரையிடப்பட்டது. காந்தியின் இறுதிக்கட்ட வாழ்க்கை வரையுள்ள நிகழ்ச்சிகளையும் சேர்த்து முழுமைப்படுத்தி அதனை 1950-ல் இந்தியில் தயாரித்தார் அவ்விளைஞர். சில ஆண்டுகள் கழித்து, ஜோசப் மக்கார்த்தியின் கம்யூனிச எதிர்ப்பு வேட்டை ஹாலிவுட்டைப் பதம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அப்படத்தை ஆங்கிலத்தில் தயாரித்து, அமெரிக்காவிலும் வெளி யிட்டார்.
இப்படி சாதனைக்கு மேல் சாதனை புரிந்த இளைஞர் ஏ.கே. செட்டியார்.குடத்திலிட்ட விளக்குகளுக்குத் தமிழுலகில் பஞ்ச மில்லை. அவர்களுள் ஒருவர் அ.ராம.அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்ற ஏ.கே.செட்டியார் (4.11.1911 -10.9.1983). (‘ஏ.கே. செட்டியார்’ என்ற பெயரிலேயே தம் நூல்களையெல்லாம் வெளியிட்டபோதும், பல இடங்களில் ‘அ.க.செட்டியார்’ எனவும் கையெழுத்திடும் வழக்கம் அவருக்கு இருந்துள்ளது.) தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை – தம்மை முதன்மைப்படுத்திக்கொள்ளாமல் – ஆவணப்படுத்தியவர்களில் அவர் மிக முக்கியமானவர்.
ஏ.கே.செட்டியாரின் அடக்கத்தின் காரணமாக, அவர் பெருமை பரவலாக அறியப்படாமல் போய்விட்டது. தமிழக அரசு பாரதி நூற்றாண்டு விழா எடுத்தபோது, பாரதியியலுக்கு அவர் ஆற்றிய பங்கைப் பாராட்டி ஒரு கேடயம் வழங்க முன்வந்தது. அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த ஏ.கே.செட்டியார், விழா நாளன்று பனகல் பூங்காவில் அமர்ந்திருந்ததாகச் சொல்வார்கள்.
விளம்பரத்தை விழையாததால் ஏ.கே.செட்டியாரின் புகைப்படம் கிடைப்பதுகூட அரிதாக இருக்கிறது. பின்னாளில், அவர் தம் புகைப்படம் வெளிவருவதை முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார். ஆனந்த விகடன் பொன் விழா ஆண்டில், ஒவ்வோர் ஆண்டு இதழையும் தொகுத்து அறிமுகம் செய்யும் பொறுப்பு, பெயர்பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு, அத்தொகுப்புகள் அவ்வவ் வெழுத்தாளரின் படத்தோடு வெளியிடப்பட்டன. 1959-ம் ஆண்டுத் தொகுப்பை ஏ.கே.செட்டியார் தொகுத்தளித்தபோது ‘திரு.ஏ.கே.செட்டியார் தமது புகைப்படத்தைப் பிரசுரிக்கக் கொடுப்பதில்லை என்ற கொள்கையுடையவராதலால் அவரது புகைப்படத்தைப் பிரசுரிக்க இயலவில்லை’ என்ற விகடன் ஆசிரியர் குறிப்பு மட்டுமே இடம்பெற்றது.
அப்பேர்பட்டவர் காலமான நாளிது

