Wednesday, February 4, 2026
Homeசினிமாஇசையாய் தினமும் மலரும் "எஸ்.பி. பாலசுப்ரமணியம்" நினைவு நாளின்று!

இசையாய் தினமும் மலரும் “எஸ்.பி. பாலசுப்ரமணியம்” நினைவு நாளின்று!

எஸ்.பி.பியின் பாடல்களைக் கேட்காமல் தமிழர்கள் யாரும் காதலித்திருப்பாய்ங்களா? கேட்டா  என்ன பதில் வருமுன்னு எல்லாருக்கும் தெரியும்.

‘சங்கராபரணம்’ படத்துக்காக முதல் தேசிய விருதை வாங்கிவிட்டு, ‘எனக்குக் கர்னாடக சங்கீதம் தெரியாது’ என்று பாலு சொன்னபோது கர்னாடக சங்கீத மேதைகளே ஆடிப்போனாய்ங்க. 

அதேபோல இராண்டாவது தேசிய விருதினை ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்காக வாங்கியபோது, ‘எனக்கு இந்தி தெரியாது’ என்றபோது, ‘கியா..!’ என ஷாக் ஆகிபுடுச்சு பாலிவுட்.

பாடகராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய எஸ் பி பாலசுப்ரமணியம் தொலைக்காட்சித் தொடர்கள் தமிழகத்தில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த தொடர்களின் தொடக்கப் பாடலை பாடி இல்லங்கள் தோறும் தனது குரல் தினமும் ஒலிப்பதை உறுதி செஞ்சார்.

சாரீரம் சரீரம் எல்லாமே இசையால் நிரம்பியவர் எஸ்.பி.பி. ஒரேநாளில் அசுரத்தனமாக 19 பாடல்களைப் பாடி கம்போஸ் செய்ததெல்லாம் இன்றளவும் யாரும் மிஞ்ச முடியாத ரெக்கார்டு. அதேபோல ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருமாறி பல படங்களுக்கு இசையமைத்ததும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இந்தியா முழுவதும் 13 நடிகர்களுக்குக் குரல் கொடுத்திருப்பதும் ஆல்டைம் ரெக்கார்டுதான்!

நெசமாவே எஸ்.பி.பி ஓர் அதிசயப்பிறவி. கர்னாடக சங்கீதம் கற்காமலே இசையில் சாதனைகள் நிகழ்த்திய, பொறியியல் படித்த இளைஞன். 

எல்லாமே கேள்வி ஞானம்தான். 

மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதையும் பாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர். அவைதான் அவருக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவுக்குப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்துச்சு. 

எந்தப் பாடகனுக்கும் ஆரம்பத்தில் உச்ச நட்சத்திரங்களுக்குப் பாட வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் எஸ்.பி.பி தமிழில் எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி அறிமுகமானவர். 

16 மொழிகளில் 42,000 பாடல்கள். 45 படங்களுக்கு இசையமைப்பு. பல நூறு படங்களுக்கு கதாநாயகனுக்கு பின்னணி குரல். அது மட்டுமில்லாமல் 73 திரைப் படங்களில் நடிச்சிருக்கார். 

நான்கு மொழிகளில் ஆறு தேசிய விருதுகள், பல்வேறு மாநில அரசின் எண்ணற்ற விருதுகள் என அனைத்து விருதுகளும் தன்னை பெருமைப் படுத்திக் கொண்டன. 

உலகம் முழுவதும் இசை கச்சேரிகள் நடித்தி இருக்கார். ரெக்கார்டிங் போது  ஜஸ்ட் பத்து நிமிடத்தில் பாடல் பாடி முடிச்சுடுவார்.

உலக அளவில் பேசப்பட்ட காந்தி திரைப்படத்தில், காந்தியாக நடித்த பென்கிங்ஸ்லிக்கு பின்னணி குரல் கொடுத்தவர் எஸ்பிபி. இதனை தனது வாழ்நாள் பெருமையாக கருதினார். 

தாத்தா தொடங்கி கொள்ளுப் பேரன் வரை பல மொழிகளிலும் சேர்த்து நான்கு தலைமுறை நடிகர்களுக்கு எஸ்பிபி பாடல்கள் பாடியுள்ளார்

அந்த வகையில் கிட்டத்தட்ட அரை நூறாண்டு காலம் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைச்சிருந்த இந்த காந்த குரலோன் எஸ்.பி.பி பாடல்களை தினசரி வாழ்க்கையில் ஒரு முறையாவது கேட்காமல் கடப்பது கடினம். – அப்படீன்னு சொன்னா அது மிகையல்ல.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments