தொடக்கத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தனர்
பின்னாளில், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினர்
மனதை லேசாக்கும் இசை, லேசாகவும் எளிமையாகவும் கிடைக்க, அதில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ரசிக மனங்களுக்கும் சினிமா இசைக்கும் ஓர் உறவு அங்கே பூத்தது. அப்படி உறவைப் பூக்கச் செய்தவரையே உறவாய்க் கொள்ளத் தொடங்கினர் மக்கள்.
அவரே… எம்.எஸ்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன்.
சேர நாட்டிளம் பெண்களுடனே என மகாகவியால் மகிழ்ந்துரைக்கப்பட்ட கேரள மாநிலம். பாரம்பரிய இசைக்கு பேர்போன பாலக்காடு. அதன் அருகேயுள்ள எலப்பள்ளி கிராமம். அங்குதான், 1932-ம் ஆண்டு “எம்.எஸ். விஸ்வநாதன்” என்ற இசைப்பறவை உருவானது. எம்.எஸ்.வி. என்ற அந்தக் குழந்தையின் முதல் அழுகை கூட நிச்சயம் சங்கீதமாகத்தான் இருந்திருக்கும். மூன்றரை வயதில் தந்தையை இழந்த எம்.எஸ்.வி., தாயின் அன்பிலும், தாய் வழி தாத்தா கிருஷ்ணன் நாயர் அரவணைப்பிலும் வளர்ந்தார். கண்ணனூருக்கு மாற்றம் செய்யப்பட்ட கிருஷ்ணன் நாயரோடு, அங்கே சென்ற எம்.எஸ்.வி.க்கு, இசை மீது தவிர்க்க முடியாத பற்று. 3 ரூபாய் கொடுத்து இசைப் பள்ளியில் சேரமுடியாததால், இசைப்பள்ளியின் ஆசிரியர் நீலகண்ட பாகவதருக்கு எடுபுடி வேலைகள் செய்து, இசையின் அகரம் அறிந்துகொண்டார் எம்.எஸ்.வி. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் எம்.எஸ்.வி. வளர, இசையும் அவரிடம், அவரை விட வேகமாக வளர்ந்தது.
ஜூபிடர் பிக்சர்ஸ்… தமிழ் சினிமாவின் ஆலமரம். இங்கு S.V. வெங்கட்ராமன், வரதராஜூலு, எஸ்.எம். சுப்பையா நாயுடு உள்ளிட்ட பல இசைக்கூடுகள் சுவாசித்தன. இந்த இசையை, ரசிகர்களின் மனங்கள் நேசித்தன. எம்.எஸ்.வியின் தாய் மாமன் ஜூபிடர் பிக்சர்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், எம்.எஸ்.விக்கு அங்கு வேலை கிடைத்தது. S.M. சுப்பையா நாயுடுவிடம், இசை உதவியாளனாய் சேர்ந்தார் எம்.எஸ்.வி. படிப்படியாகத்தான் வளர்ச்சி, ஆனால் எல்லாப் படிகளிலும் முன்னேறிவிட முடியாமல் எம்.எஸ்.விக்கு எத்தனையோ தளர்ச்சி. என்ன செய்வது, என்னதான் அறிவு, ஆற்றல், அழகு இருந்தாலும், பிருத்திவிராஜன்கள் வரும்வரை சம்யுக்தைகள் காத்துக்கொண்டுதானே இருக்க வேண்டி இருக்கிறது!.
வீர அபிமன்யு என்ற படத்தில், ஒரு பாடலுக்கான மெட்டு, இசை மேதை சுப்பையா நாயுடுவோடு போர் புரிந்துகொண்டிருக்க, சிறுவனான எம்.எஸ்.வி. யாருக்கும் தெரியாமல், அழகான மெட்டொன்றை வாசித்துக் காட்ட, மெய்சிலிர்த்த சுப்பையா நாயுடு, அந்த மெட்டைத் தன்னுடையது என இயக்குநரிடம் கொண்டுபோய் சேர்க்க, இது அற்புதம் என்று புகழப்பட்டு, அந்தப் பாடல் வெளியானது. முதல் முதலாக மெட்டு அமைத்தாலும், எம்.எஸ்.வி. பெயர் வராததால் ஏமாற்றம். தான் பெற்ற பிள்ளையை, வேறு ஒருவர் உரிமை கொண்டாடினால், உடைந்து போகாதா மனது. பரவாயில்லை. திறமைசாலிகள் துவண்டு விடமாட்டார்கள். எம்.எஸ்.வி துவளவில்லை. ஒரு வழியாக பல போராட்டங்களுக்குப் பிறகு, சென்னையில் இசையமைப்பாளர் C.R. சுப்பராமனிடம் உதவியாளனாய்ச் சேர்ந்து, எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த “ஜெனோவா” படத்திற்கு, இசையமைப்பாளர் வாய்ப்பு எம்.எஸ்.விக்குக் கிடைத்தது. நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில், முதன்முதலாய் எம்.எஸ்.விக்கு ஒரு வசந்தம் அறிமுகமானது. இதில் சிறப்பாகப் பாடல்கள் அமைத்திருந்தார் எம்.எஸ்.வி.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினி, கமல் என எத்தனையோ கதாநாயகர்களின் படங்களுக்கு எழுதப்பட்டிருந்த வெற்றியின் முகவரியில், எம்.எஸ்.வி.யின் பெயர் பிரதான இடம் பெற்றிருந்தது.
சந்தம் பெரிதா? பாடல் பெரிதா? எல்லாம் சந்தங்களுக்கும் பாடல் எழுத முடியுமா? மெல்லிசை மன்னருக்கும், திரையுலகல் கம்பன் கண்ணதாசனுக்கும் ஒரு போட்டி. ஆனால் இந்தப், போட்டியில் உண்மையான வெற்றி ரசிகர்களுக்குத்தான். அந்தப் பாடல்தான் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ என்ற பாடல்.
தமிழ் சினிமா இசை வரலாற்றில், அமர்க்களமான அத்தியாயமாகத் திகழ்ந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் சினிமா இசையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கலந்திருக்கும் எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி

