இந்திய ரயில்வே தனது பயண விதிகளில் ஒரு முக்கியமான கட்டுப்பாட்டைத் தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பயணிகள் தங்களது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள ஏறும் நிலையத்தில் (Boarding Station) இருந்து பயணத்தைத் தொடங்கவில்லை என்றால், அந்த இருக்கை உடனடியாக ரத்து செய்யப்படும்.
ரயில் புறப்பட்ட பிறகு குறிப்பிட்ட நிலையத்தில் பயணி ஏறியிருக்கவில்லை என்பதை டிடிஇ (TTE) உறுதி செய்து பதிவு செய்தவுடன், அந்த இருக்கையானது RAC அல்லது காத்திருப்புப் பட்டியலில் (Waiting List) இருக்கும் மற்ற பயணிகளுக்கு உடனடியாக ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களின் திட்டமிட்ட ஏறும் நிலையத்தைத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ரயில் புறப்படுவதற்கு முன்பே தங்களது ‘ஏறும் நிலையத்தை’ (Boarding Point Change) அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் வேறு ஒரு நிலையத்தில் ஏற முயன்றால், இருக்கையை இழப்பது மட்டுமின்றி, டிக்கெட் கட்டணத்தையும் திரும்பப் பெற முடியாது என ரயில்வே எச்சரித்துள்ளது. இந்த விதிமுறை பயணிகளின் வசதிக்காகவும், காலி இருக்கைகளைத் தகுதியானவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்காகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

