எப்பவும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, சாம்பார் செஞ்சி போர் அடிக்குதா? அப்போ ரோட்டு கடை தக்காளி சட்னி ஒரு வாட்டி செஞ்சு பாருங்க! ரெண்டு இட்லி சாப்பிடுறவங்க கூட அஞ்சு இட்லி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
* தக்காளி – 1/2 கிலோ
* வெங்காயம் – 3
* பச்சை மிளகாய் – 2-3
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 2 கொத்து
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தக்காளி பழங்களை சேர்த்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, தக்காளி பழங்களை வெளியே எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 3 டீஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி நன்கு, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* சட்னியில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கோவை தக்காளி தண்ணி சட்னி தயார். இந்த சட்னி தக்காளி தண்ணி சட்னி என்பதால், நீரை சற்று அதிகமாகவே ஊற்றிக் கொள்ளலாம்.
சூப்பரான தக்காளி சட்னி ரெடி!

